இருட்டுக்கடை உரிமையாளர் மகளை மணந்த கோவைக்காரர் மேல் மீண்டும் புகார்
- by David
- Apr 23,2025
திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாவின் மகள் கனிஷ்கா கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் ஆகி சிலநாட்களே ஆகிய நிலையில் பல்ராம் சிங் மற்றும் அவரின் குடும்பத்தினர் இருட்டுக்கடை அல்வா கடை உரிமத்தை வரதட்சணையாக கேட்டு தனக்கு அழுத்தம் தருவதாக நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் கனிஷ்கா புகாரளித்திருந்தார்.இதற்கு கனிஷ்காவின் மாமனார் யுவராஜ் மறுப்பு தெரிவித்திருந்தார்.
கனிஷ்காவின் புகார் குறித்த விசாரணைக்கு பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பல்ராம் சிங் ஆஜராக வேண்டும் என காவல் துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி கோவையில் பல்ராம் சிங்கிற்கு பல்வேறு வேலைகள் இருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்று கூறி 10 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார்.
இந்நிலையில், இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகள் கனிஷ்கா திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை தற்போது வழங்கியுள்ளார். அதில் தனது கணவர் பல்ராம் சிங் வெளிநாடு தப்பி செல்ல முயற்சிப்பதாக தனக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளது என கூறி, அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.