கோவை வெள்ளியங்கிரி கோவில் வளாகத்தில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இதற்காக இப்போது ஒரு கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

கோவை பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்கு பிப்ரவரி 1முதல் மே 31 வரை  வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் பக்தர்கள் அதிக அளவில் தினமும் இங்கு வருகை தருகின்றனர். இதனால் இந்த மாதங்களில் மட்டும் இங்கு கடைகள் அதிகம் செயல்படும். மேலும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

இந்த நிலையில் கோடை காலசூழலால் வனத்தில் இருந்து வெளியேறி ஒற்றை காட்டு யானை கோயில் வளாகத்தில் உலா வருகிறது. இதனால் பக்தர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இங்கு உள்ள கடைகளை காட்டு யானை சேதப்படுத்தியுள்ளது. ஆனால் மக்கள் யாரையும் அந்த யானை சீண்டவில்லை. இந்த கோடை காலத்தில் அது உணவு, நீர் தேடி தான் இங்கு வருவதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் ஒற்றைக் காட்டு யானையை, காட்டுக்குள் விரட்டவும், இங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருக்கவும் டாப்சிலிப் முகாமில் இருந்து நரசிம்மன் என்ற கும்கி யானையை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர். இந்த கும்கி யானை இங்கு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை மற்றுமொரு ஒரு கும்கி யானை அழைத்து வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.