கோடநாடு வழக்கு : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் கோவை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!
- by David
- Apr 28,2025
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் அமைந்துள்ளது. அவர் இறந்த பிறகு ஏப்ரல் 23, 2017 அன்று கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்தது.
இந்தச் சம்பவத்தில் எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கனகராஜ், சேலம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கில் சயான், மனோஜ், தீபு, சதீஷன், ஜம்சேர் அலி, சந்தோஷ் சாமி, பிஜின் குட்டி, உதயகுமார், மனோஜ் சாமி உள்பட 12 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸார், வழக்குத் தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்றனர்.இதுவரை 250க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி, அவர்கள் கூறும் பதிலை விடியோவில் பதிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவகத்தில் மே 6ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இந்த வழக்கில் பூங்குன்றனை ஐஜி தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.