ஒரு வீட்டை கட்டிட பெண் பணியாளர்கள் பயன்படுத்தப்படுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு வீட்டை முழுமையாக பெண்கள் பெயிண்ட் செய்து பார்த்திருப்போமா?

ஏன் இப்படி கேட்கின்றோம் என்றால், வீட்டுக்கு வண்ணம் பூசுவதிலும் பல சவாலான பணிகள் உள்ளன. 

முதலில் மேற்பரப்பு தூசிகளை அகற்ற வேண்டும், அதன் பின் சுவர்களை சுத்தம் செய்யவும், அது உட்புறமாக உள்ள அழுக்கு, அச்சு ஆகியவற்றை அகற்ற வேண்டும். அதற்கு அடுத்து சுவர்களில் ஏதேனும் விரிசல் அல்லது துளைகள் இருந்தால் அதை நிரப்ப புட்டியைப் பயன்படுத்தவேண்டும், அதன் பின் சுவற்றின் மேற்ப்பரப்பை சமமாக்கிட சண்ட் பேப்பர் கொண்டு   மென்மையாக்க வேண்டும். அதற்கடுத்து பெயிண்ட் சுவற்றில் நன்கு ஓட்ட ப்ரைமரைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு அடுத்து தான் வண்ணம் பூச வேண்டும்.  அனைத்து இடங்களிலும் பெயிண்ட் சீராக இருக்க 2 முறை கோட்டிங் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு நிறைய பணிகள் உள்ளதால் கட்டிடங்களுக்கு பெயிண்ட் செய்வது பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒரு பணியாக இருந்துள்ளது. ஆனால் இந்த நிலையை மாற்ற  உலகின் 4 ஆவது பெரிய பெயிண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனமான 'நிப்பான் பெயிண்ட்' (Nippon Paint)  கடந்த 4 ஆண்டுகளாக nShakti எனும் திட்டம் மூலம் மாற்றிவருகிறது. இதனால் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது? தமிழகத்தில் குறிப்பாக கோவையில் இதனால் எப்படி பட்ட தாக்கம் ஏற்ப்பட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் nShakti !

n என்றால் Nippon (நிப்பான்) Sakthi என்றால் பெண்; இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு பெயிண்டிங் துறை சார்ந்த பயிற்சி அளித்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் எனும் நோக்கத்தில் nShakti திட்டம்  2018ல் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் 2019ல் முதலில் சென்னையில் துவங்கப்பட்ட இந்த திட்டம் நாளடைவில் திருவண்ணாமலை, மயிலாடுதுறை மற்றும் கொங்கு மண்டல பகுதிகளான கோவை, திருப்பூர், ஈரோடு என பரவியது.

"இந்த திட்டத்தின் மூலம் சேரும் பெண்களுக்கு நாங்கள் பெயிண்ட் உற்பத்தி எப்படி நடைபெறுகின்றது என்பதில் ஆரம்பித்து, எப்படி பெயிண்ட் செய்யவேண்டும், பெயிண்டிங் செய்ய தேவை படும் பொருட்கள் என்ன, அதை அப்படி பயன்படுத்த வேண்டும், நிறங்களை எவ்வாறு கலவை ஆக்குவது, நிப்பானின் புது பெயிண்ட் தயாரிப்பு, அல்லது வேறு பெயிண்டிங் கருவிகள் சந்தைக்கு வரும்போது அதுபற்றிய அறிமுகம் என பெயிண்டிங் பற்றி அ முதல் ஃ வரை 12 நாட்கள் முதலில் கற்றுக்கொடுப்போம். இதில் 2 நாட்கள் தவிர மீதி எல்லா நாட்களுமே அவர்களுக்கு செய்முறை தான்," என்கிறார் நிப்பான் பெயிண்டின் கோவை nShakti பயிற்சியாளர் தமிழ் இனியன்.

இதற்கு அடுத்து அவர்களில் யாருக்கு பெயிண்டராக பணிசெய்ய விருப்பம் உள்ளதோ அவர்களை பெயிண்டிங் ஒப்பந்ததார்களிடம் அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவியாக இருப்பார்கள் nShakti குழுவினர்.

"நிப்பான் பெயிண்ட் விற்பனை மையங்களில் nShakti பெயிண்டர்கள் பற்றி தகவல்கள் அடங்கிய ஸ்டால்கள்  இருக்கும். இதில் எங்கள் முகவர் ஒருவர் பெயிண்ட் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் nShakti பெயிண்டர்கள் பற்றி கூறுவார். அவர்கள் விரும்பினால் அவர்கள் இல்லத்தை nShakti பெயிண்டர்களே ஒரு ஒப்பந்ததாரர் கீழ் முழுவதுமாக பெயிண்ட் செய்து கொடுப்பார்கள்," என்றார் தமிழ் இனியன்.

" nShakti திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகத்தில் 950க்கும் அதிகமான பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் 150க்கும் மேலானோர் இப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெயிண்டர்களாக பணி செய்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் தற்போது வரை 57 பேர் nShakti பெயிண்டர் பயிற்சியை வெற்றிகரமாக எடுத்து உள்ளனர். மாநிலம் முழுவதும் பயிற்சி எடுத்த பலரும் பெயிண்டிங் ஒப்பந்ததாரர்களாகவும் உள்ளனர்," என்றார் நிப்பான் பெயிண்டின் கோவை, சென்னை  nShakti பயிற்சியாளர் பிரவீன் குமார்.

நிப்பான் பெயிண்ட் நிறுவனம் மூலம் பெயிண்டர் ஆக பயிற்சி எடுக்க கட்டணம் எதுவும் கிடையாது. வயது வரம்பு 18-35 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவர்களால் ஒரு நாளைக்கு குறைந்தது ரூ. 500 சம்பளமாக பெற முடியும். திறன்மிகு பெயிண்டர்களாக உருவெடுக்கும் நபர்கள் ரூ.1000 கூட தின ஊதியமாக பெற முடியுமாம். பணி நேரம் 8 மணி நேரம் தான். பயிற்சி நிறைவில் நிப்பான் வழங்கும் பயிற்சி சான்றிதழும், அதற்கு அடுத்து பெயிண்டிங் வேலை பற்றி தொடர்ந்து தகவலும் கொடுக்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி வாய்ப்பு உள்ளதை NGO/ அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக, பெண்கள் நல அமைப்புகள் மூலமாக நிப்பான் பெயிண்ட் நிறுவனத்தின் nShakti குழுவினர் தெரிவித்து, அவர்களில் விருப்பம் உள்ளவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்கிவருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை மாநகரம், பொள்ளாச்சி, ஆனைமலைஆகிய பகுதிகள் தொடர்ந்து  nShakti பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. அடுத்ததாக அணைகட்டி பகுதியில் உள்ள பெண்களுக்கு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாநகரிலும் nShakti பெயிண்டர்கள் வண்ணம் பூசும் பணி செய்து வருகின்றனர்.

கோவையில் பணி செய்யும் nShakti பெயிண்டர்கள்!

ஈரோடு இலங்கை தமிழர் முகாமில் உள்ள பெண்களுக்கு நிப்பான் பெயிண்டின் nShakti திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி வழங்கப்படுவதும், அதை தொடர்ந்து பெயிண்டராக வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்பதும் தெரியவந்ததை அடுத்து அவர்களில் சிலர் இந்த பயிற்சியை விருப்பத்துடன் கற்று இன்று தினமும் பணி செய்து வருகின்றனர். இவர்களில் சிலரிடம் பேசுகையில், அவர்களுக்கு இந்த பயிற்சி பெரும் வாய்ப்பை வழங்கியிருப்பதாக கூறினார்.

"எனது கணவர் பெயிண்டர் என்பதால் நான் இந்த தொழில் பற்றி ஏற்கனவே சற்று அறிந்திருந்தேன்.எங்கள் முகாமில் nShakti திட்டம் பற்றி சொன்னபோது நான் முதலில் விருப்பத்துடன் சேர்ந்து பெயிண்டிங் பற்றி முழுவதுமாக கற்றுக்கொண்டேன். இப்போது நிப்பான் nShakti கீழ் 3 ஆண்டுகளாக பெயிண்டராக உள்ளேன்."

"எனக்கு அடிக்கடி நிப்பான் மூலமாக கிடைக்கும் அறிமுகங்களால் பெயிண்டிங் வேலை கிடைக்கின்றது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் என் குடும்பத்திற்கு கூடுதல் உதவியாக இருக்கிறது. எனது மகள் இப்போது +1 படிக்கிறாள், எனது மகன் கல்லூரி சேர்ந்துள்ளான். அவர்கள் கல்வி கற்க என்னால் ஆன உதவியை செய்யமுடிகிறது என்பது மகிழ்ச்சியே," என்றார் பெயிண்டர் மேரி ஸ்டெல்லா.

பெயிண்டர் கவுசிகா கூறுகையில், " எங்களுக்கு நிப்பான் தரப்பில் இருந்து முழுமையாக பயிற்சி வழங்கியுள்ளனர் என்பதால் எங்களால் எளிதாக பெயிண்டிங் செய்ய முடிகிறது. எங்களால் குறித்த நேரத்தில் பணியை முடித்து கொடுக்க முடியும் என்பதும் எங்களுக்கு சந்தோஷமே. எங்களுக்கு மாதம் முழுவதுமே பணி செய்ய வாய்ப்புகள் வருவதால் நிலையான வருமானம் கிடைக்கின்றது என்பதில் மகிழ்ச்சி. என் கணவர் ஒருவரின் சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்துவதை விட என்னுடைய பங்களிப்பு இருப்பதால் தன்னம்பிக்கையாக உள்ளது," என்றார்.