கோவை மாநகராட்சியின் வார்டு என் 25க்கு உட்பட காந்தி மாநகர் பகுதி சாலையில் பல இடங்களில் பெரிய அளவில் குண்டுகுழிகள் உள்ளன.

காந்திமாநகர் பெயர் பலகை வைத்துள்ள ரோடு வழியே செல்பவர்கள் 2 முதல் 3 இடங்களில் இதுபோன்ற பெரிய குண்டுகுழிகளை கடந்து செல்லவேண்டியுள்ளது. அதுவும் இருட்டு நேரத்தில் வாகனத்தில் இந்த வழியே செல்பவர்களுக்கு இங்கு குழிகள் இருப்பது தெரிவதில்லை. இதனால் அவர்கள் திடீரென பிரேக் பிடித்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த குழிகள் முறையாக மூடப்படவில்லை என்றால் இந்த மழை நாட்களில் வாகன ஓட்டிகள் யாருக்காவது அசம்பாவிதம் ஏற்படலாம். எனவே மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சுகாதாரம் பாதிப்புக்குள்ளாகும் நிலை!

இதே சாலையின் துவக்கத்தில் (காந்திமாநகர் பெயர் பலகை வைத்துள்ள ஆரம்ப இடத்தில்) பலரும் சிறுநீர் கழித்து செல்கின்றனர். இது தொடர்ச்சியாக நடக்கிறது. சிலர் சாலை ஓரமாக உள்ள பெட்டி கடையில் நின்று புகைபிடிக்கின்றனர், மது அருந்துகின்றனர், பின்னர் அங்கேயே சிறுநீர் கழிக்கின்றனர். 

இவர்கள் மட்டுமல்ல, இந்த சாலை வழியே செல்லும் பலரும் அவ்வாறு அசுத்தம் செய்கின்றனர். காந்தி மாநகர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்கும் போது, சில பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அங்கிருந்து வந்து இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர். இந்த வழியே செல்லும் பலரும் இதற்கான இடமாக இதை பார்க்க துவங்கியுள்ளனர். இதை உடனே தடுக்க நடவடிக்கையை மாநகராட்சி எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதி மக்களிடம் உள்ளது. 

இந்த சாலை போக போக லேசாக சாய்வு நிலையில் செல்வதால் மழை நாட்களில் இந்த பகுதியில் மழைநீர் உடன் அசுத்தங்களும் சாலையில் பரவுகிறது. இதனால் மழை காலங்களில் இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.

இதுமட்டுமில்லை, இதே சாலையின் துவக்கத்தில் உள்ள காலி நிலத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருக்கும் சிலர் தங்கள் குடும்பத்தினருடன் தங்கும் நிலை உள்ளது. இவர்களில் பலரும் இங்கேயே வாழ்க்கின்றனர்.

இவர்களுடன் தங்கும் சிறுவர் சிறுமியர் சிலர் அருகில் உள்ள இடங்களை இயற்கை உபாதைக்கு பயன்படுத்துகின்றனர். ஏற்கனவே பொதுமக்கள் குப்பைகளை வீசிச்செல்லும் இடமாக இந்த பகுதி உள்ளது. இதனால் பல சிரமங்களை இந்த பகுதி மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். எனவே மாநகராட்சி இதையெல்லாம் கருத்தில் கொண்டு இங்கு வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.