கோவை மாநகர சாலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட யு-டர்ன் அமைப்பால் வாகனஓட்டிகள் சந்திக்கும் பாதிப்புகள் கொஞ்சநஞ்சம் அல்ல. 

இந்த முறையால் சாலையில் போக்குவரத்து நெரிசல் தான் அதிகரிக்கிறதே தவிர அது எளிமை ஆகவில்லை என்பதையும் பழைய ட்ராபிக் சிக்னல் முறையையும் மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் பல காலமாக கூறிவருகின்றனர்.

ட்ராபிக் சிக்னல் மற்றும் ஒரு ட்ராபிக் போலீஸ் அந்த இடத்தில் இருந்தால் பொதுமக்களுக்கு, வாகனஓட்டிகளுக்கு குறிப்பாக பாதசாரிகளுக்கு பெரும் பாதுகாப்பாக அமையும். ஆனால் இன்று கோவை மாநகரின் பல இடங்களில் சிக்னல் முறை குறைந்து வருகிறது. சில சாலைகளில் இருக்கும் சிக்னல்கள் சிலவும் செயல்படாமல் உள்ளன. 

அவிநாசி சாலையில் எங்கெல்லாம் யு டர்ன் முறை உள்ளதோ அங்கெல்லாம் ஒன்-வேயில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. 2 சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், உணவு விநியோக பணியாளர்கள் என பலரும் ஒன்-வே பயணங்களை மேற்கொள்கின்றனர்.

தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கான யு டர்ன் அமைப்பு என்பது மிக தொலைவில் இருப்பதால் ஒன்-வேயில் செல்வதை பின்பற்றுகின்றனர்.

உதாரணத்திற்கு கோவை பீளமேடு காவல் நிலையம் பகுதியை எடுத்துக்கொள்ளலாம். இந்த பகுதியில் முதலில் டிராபிக் சிக்னல் இருந்தது. பீளமேட்டில் இருந்து வருகையில், சிக்னலில் இருந்து வலது பக்கம் சென்றால் பிரபல பி.எஸ்.ஜி. மருத்துவமனை,  ஃபன் மால், ஜீ.வி.ரெசிடென்சி ஆகிய இடங்களுக்கு செல்ல முடியும்.

இப்போது அங்கு சிக்னல் இல்லை, அங்கே வாகனங்கள் திரும்ப தடையாக புது மேம்பால தூண்களும் இல்லை. ஆனாலும் இங்கு திரும்ப முடியாதபடி தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. எனவே பீளமேட்டில் இருந்து வருபவர்கள் ஜி.ஆர்.ஜி. கல்லூரி அருகே உள்ள யு-டர்ன் வரை சென்று, அங்கிருந்து திரும்பி வந்து தான் பி.எஸ்.ஜி. மருத்துவமனை, ஃபன் மால், ஜீ.வி.ரெசிடென்சி ஆகிய இடங்களுக்கு செல்லவேண்டும். இதனால் பீளமேட்டில் இருந்து வரும் பல வாகனங்களும் கேரமல் பேக்கரி அடுத்து வரும் யு-டர்னில் சென்று அங்கிருந்து ஒன்-வேயில் செல்கின்றனர். இது போல பல இடங்களில் நடக்கிறது.

மேலும் யு - டர்ன் உள்ள இடங்களில் பீக் நேரங்களில் திரும்ப நிற்கும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், போக்குவரத்து இயல்பாக இருப்பதில்லை. சில இடங்களில் விபத்துகள் கூட ஏற்பட்டுள்ளது. ஆனால் அவை அதிகாரிகள் கண்களில் படுவதில்லை போல.

இதுகுறித்து நேற்று கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாரிடம் கேட்டதற்கு, இது பற்றி மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டியில் ஆலோசனை நடைபெற்றது. இதுகுறித்து ஆய்வு விரைவில் நடைபெறும். யு-டர்ன் அமைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஆனால் பழைய ட்ராபிக் சிக்னல் முறை தான் வேண்டும் என்பது மக்கள் பலரின் கோரிக்கையாக உள்ளது.