கோவை மாவட்டத்தில் உள்ள நீலம்பூர் - மதுக்கரை இடையே 2 வழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலை துறையுடன் எல் & டி எனும் தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்து 1998ல் அதை கட்ட ஆரம்பித்து 2000ல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது.

'எல் & டி பைபாஸ் சாலை' என்று அறியப்படும் இந்த புறவழிச்சாலையை சுங்க சாவடி அமைத்து 30 ஆண்டுகள் பராமரிக்க ஒப்பந்தம் அரசுக்கும் அந்த நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.

இந்த பாதை மூலம் கோவையிலிருந்து கேரளாவுக்கு வேகமாக செல்ல முடியும். மேலும் சென்னை பெங்களூரு போன்ற  நகரங்களுக்கு கேரளாவில் இருந்து செல்லும் வாகனங்கள் இந்த பைபாஸை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதில் நாளுக்கு நாள் 2 சக்கர வாகனங்கள் முதல் பெரும் சரக்கு லாரிகள் வரை பயணிப்பது அதிகரித்து வருகிறது.

இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் அடிக்கடி ஏற்படக்கூடிய சாலை விபத்துகளையும் குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

2029 வரை இந்த சாலையை எல் & டி நிறுவனம் பராமரிக்க, சுங்கவரி பெற உரிமை பெற்று உள்ளது. இந்நிலையில் எல் & டி நிறுவனத்துடன் உள்ள ஒப்பந்தம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன. அதுவரை இங்கு விரிவாக்க பணிகள் நடைபெற முடியாது. 

ஆனால் இந்த 2 வழி சாலையில் வாகனப்போக்குவர்த்து தொடர்ந்து அதிகரிக்குமேயானால் இங்கு அதைத்தொடர்ந்து விபத்து சம்பவங்களும் அதிகரிக்கும். இந்த சாலையில் 1 மாதத்தில் 4 கொடூரமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.

எனவே இந்த சாலையை இரண்டு பக்கமும் சர்வீஸ் சாலைகள் உடன் கூடிய 4 வழி சாலையாக உடனே மாற்றி அமைக்கவேண்டியது அவசியம். அவ்வாறு விரிவாக்கம் நடைபெற இரண்டு பகுதியில் 45 மீட்டர் நிலத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது.  எனவே விரிவாக்க பணிகளை சீக்கிரம் துவங்க இந்த சாலையை பயன்படுத்தும் பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

அண்மை தகவல் படி அரசும் தனியார் நிறுவனமும் இதுபற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும், ஓரிரு மாதங்களில் இது குறித்து நல்ல முன்னேற்றம் இருக்கும் எனவும் தெரியவருகிறது.