முதலமைச்சர் ஸ்டாலின் 9.10.25 (வியாழன்) அன்று திறந்து வைத்த தமிழ் நாட்டின் நீளமான மேம்பாலம் என்ற புகழ் பெற்ற ஜி.டி.நாயுடு மேம்பாலம் மீது பயணம் செய்ய ஆர்வம் வாகன ஓட்டிகளிடம் இருந்தது. அதை விட ஆர்வம் இன்ஸ்டாகிராம் தளத்தில் ரீல்ஸ் பதிவிடும் இணையவாசிகள் பலரிடம் இருந்தது. 

சிலர் ஏறுதளம், இறங்குதளங்களில்  தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு தற்படம் (செல்ஃபி) எடுக்கவும் செய்துள்ளனர் என்பதும் அவிநாசி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் மேம்பாலம் முதல் நாள் இரவே 9 மணி அளவில் மூடப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு திறக்க முடிவு செய்யப்பட்டது. இது விகடனில் கட்டுரையாகவே வந்துள்ளது. 

நேற்று (10.10.2025) தினமணி நாளிதழில் வெளிவந்த செய்தியில், ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் பாலத்திற்கு இரவு நேரங்களில் வந்து காணொளி எடுக்க பாலத்தின் மையப்பகுதி வரை செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனவே 1 வார காலத்திற்கு இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மேம்பாலம் அடைக்கப்படும் என போலீசார் கூறியதாக கட்டுரை வெளிவந்தது. 

நம்பகத்தன்மை கொண்ட தகவல் அடிப்படையில் நேற்று இது பரவலாக சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் நேற்று இரவு நேரில் மேம்பாலத்தில் சென்று பார்த்தபோது போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், இப்போது மற்றுமொரு செய்தி வெளிவந்துள்ளது. இன்றைய தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியில் " புதிய மேம்பாலம் திறக்கப்பட்ட என்று சீரியல் பல்புகளை கழற்றுவதற்காக 2 மணி நேரம் மட்டும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 1 வாரத்துக்கு இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை புதிய பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது " என போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் அசோக் குமார் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.