பயன்படுத்தப்பட்ட 2 சக்கர வாகனங்களை கன்சல்டண்சி நிறுவனங்களிடம் இருந்து வாங்கி அதை வேறு ஒரு வாடிக்கையாளருக்கு முறையாக விற்பனை செய்யும் தொழில் தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

கோவையில் இதுபோல வாகனங்களை வாங்கி விற்கும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நல சங்கம் நடத்திய ஆர்பாட்டத்திற்கு ஆதரவாக இன்று 1 நாள் கடையடைப்பில் ஈடுபட்டனர். 

ஏன் இந்த கடையடைப்பு?

2 சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்குபவர்கள், குடித்துவிட்டு வாகனம் இயக்குபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இந்த அபராதம் விதிக்கும் நடவடிக்கை இப்போது நவீனமயமாக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்தின் மீதான அபராதம் அந்த இடத்திலேயே பெறப்படாமல், அந்த வண்டியின் நம்பர் பிளாடை அடையாளமாக கொண்டு அந்த உரிமையாளர் மீது ஆன்லைனில் விதிக்கப்படுகிறது.

கடந்த சில வருடங்களாகவே அபராதங்கள் அதிகமாக்கப்பட்டுள்ளதால் கன்சல்டன்சி நிறுவனங்களிடம் விற்கப்படும் வாகனங்களில் அபராதங்கள் அதிகமாக இருந்தாலும் அதை தங்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை என்கின்றனர் இந்த தொழில் உள்ளவர்கள். மேலும் அபராதம் சம்பந்தப்பட்ட செயலி முறையாக செயல்படுவதில்லை எனவும் இந்த துறை சார்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் தொழில் ரீதியாக பெரும் நஷ்டமடைந்து வருவதாக கூறும் அவர்கள், அரசு இதன் மீது கவனம் செலுத்தி உடனே தலையிட்டு, 2 சக்கர வாகனங்கள் மீது சுமத்தப்படும் அபராதங்களை 'ஸ்பாட் பைன்' னாக பெற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

"அரசாங்கம் முன்வந்து இந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் மேல் அபராதங்களை விதியுங்கள், ஆனால் அந்த இடத்திலேயே அவர்களிடம் அபராதங்களை வசூல் செய்யுங்கள்," என கூறினர்.