கோவை மாநகரத்தின் சில பகுதிகள் எப்போதுமே பரபரப்பாக இருக்கும். உதாரணத்திற்கு கிராஸ் கட் ரோடு, பெரிய கடை வீதி  போன்ற இடங்களை குறிப்பிடலாம்.

இங்கு ஷாப்பிங் செய்யும் மக்கள் 2 சக்கர வாகனங்களில், கார்களில் வரும் போது பார்க்கிங் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவது சர்வசாதாரணமான விஷயம். அதை தாண்டி அவர்கள் பார்க்கிங் செய்துவிட்டால், அதுவே ஒரு வெற்றி என பார்க்கப்படும் ஒன்றாகி விட்டது.

கோவை மாநகரில் இது போன்று பரபரப்பாக இருக்கக்கூடிய தெருக்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுவதால், அதை குறைக்கவும், மக்களுக்கு வாகனங்களை நிறுத்தக்கூடிய வசதியை ஏற்படுத்தி தரவும், கோவை மாநகர காவல் துறையினருடன் கைகோர்த்து, கோவை மாநகராட்சி ஒரு புதிய திட்டத்தை முன்னெடுக்க உள்ளது.

'சாலையோர பார்க்கிங் திட்டம்'

வாகனங்களை சாலைகளின் ஓரங்களில் முறைப்படி நிறுத்தாமல் செல்வதாலும், மணிக்கணக்கில் அதை அங்கேயே வாகன ஓட்டிகள் நிறுத்திவிட்டு செல்வதாலும் சாலையோரத்தில் பார்க்கிங் செய்வது முறையற்று உள்ளது. இதை முறைப்படி முன்னெடுக்கவும், இதன் மூலம் சாலைகளில் நெரிசல் குறைய வழிசெய்யவும் கோவை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறையினர் ஆலோசனை செய்து, சாலையோர பார்க்கிங் திட்டத்தை முறைப்படி அமல்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். இதற்கு கட்டணம் விதிக்கவும் திட்டம் உள்ளது.

எங்கெல்லாம்? எப்படி?

இந்த திட்டத்திற்கென, கோவை ரேஸ் கோர்ஸ், கிராஸ் கட் ரோடு, பெரிய கடை வீதி, ராஜ வீதி, ரங்கே கவுடர் வீதி, வெரைட்டி ஹால் ரோடு, NSR ரோடு, பாரதி பார்க் போன்ற இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களை சாலையோரம் நிறுத்த பைக் மற்றும் கார்களுக்கென 1 மணி நேரத்திற்கு இவ்வளவு என கட்டணம் கொண்டுவரப்படும். இதை பற்றி வரவுள்ள மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சாத்தியமா?

சாலையோரம் வாகனங்களை நிறுத்த பொதுமக்கள் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், அதற்கு பதிலாக அவ்வாறு கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்காக கடைகள் நடத்தும் நிறுவனம் மாநகராட்சிக்கு கட்டணத்தை செலுத்தட்டுமே என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.