தீபாவளிக்கு பட்டாசு, புத்தாடை உடன் இனிப்பு முக்கியமான ஒன்று. கோவையில் அடுத்த 1-2 நாட்களில் வகை வகையாக, புதுமையான இனிப்பு வகைகளுடன் இனிப்பு திருவிழாக்கள் பெரும் இனிப்பு கடைகளில் துவங்கும்.
இந்த ஆண்டு தீபாவளி இனிப்பு வியாபாரம் எப்படி இருக்கும் என இந்த துறை சார்ந்த பெரும் நிறுவனத்தை சேர்ந்த ஒருவரிடம் கேட்டதற்கு அவர் கூறியது:-
வியாபாரம் மிகவும் தித்திப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். முதலில் கோவையில் இனிப்புகளுக்கு 2-3 நிறுவனங்கள் இருந்த நிலையில் மாநகரில் ஏற்படும் வியாபாரத்தில் பெருமளவு பங்கு இந்த நிறுவனங்களிடம் செல்லும் நிலைமை இருந்தது. ஆனால் இன்று களத்தில் புது நிறுவனங்கள் பல உள்ளன. புது வகை இனிப்புகளுடன் வாடிக்கையாளர்களை அவர்களும் வெகுவாக கவர்கின்றனர்.
முன்பு ஒரு இனிப்பு நிறுவனத்தின் சிறப்பு தயாரிப்பை அவர்கள் மட்டுமே தனித்துவத்துடன் செய்து வந்த நிலையில் இன்று அதை களத்தில் உள்ள அனைவரும் அதே போல தயாரிக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு நிறைய சாய்ஸ் (விருப்பங்கள்) உள்ளது.
இன்று மாறும் ட்ரெண்ட்!
இன்று பொது மக்களில் ஒரு பிரிவினர் இனிப்புகளை பெரும் நிறுவனத்தில் வாங்குவதை தாண்டி, பாரம்பரிய முறையில் வீடுகளில் செய்யும் இனிப்புகளை தேர்வு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
உதாரணத்திற்கு ஒரு பெரும் இனிப்பு நிறுவனம் பிரீமியம் லட்டு, பிரீமியம் ஆல்வா என முந்திரி, பிஸ்தா, பாதாம் போன்ற அனைத்தையும் போட்டு இனிப்பை செய்து ரூ.700க்கு விற்பனை செய்கிறது என வைத்துக்கொள்வோம். மற்றொரு புறம், ஒரு சிறு வியாபாரி தனது வீட்டிலேயே இனிப்புகளை இந்த மாதிரி ப்ரீமியம் பொருட்கள் இல்லாமல் செய்கிறார்.
ஆனால் அவர் கடலை மாவுக்கு பதிலாக சிறுதானியங்களை கொண்டு, தனது இனிப்புகளை செய்யும் போது, அதற்கு மக்களிடம் மதிப்பு ப்ரீமியம் இனிப்புக்கு நிகராக அதிகரிப்பதை காண முடிகிறது. இதை மக்கள் தேடி செல்கின்றனர். இது தான் இப்போது உள்ள ட்ரெண்ட்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் உள்ள தொழில் அதிபர்கள் சிலர் இவ்வாறு பாரம்பரியமாக வீடுகளில் செய்யும் இனிப்புகளை வாங்கி தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், நண்பர்களுக்கு பரிசளிப்பதை தற்போது காண முடிகிறது. மாறும் ட்ரெண்டால் இப்போது சிறு நிறுவனங்களுக்கும் வசந்த காலம் தான்.
கோவையில் தீபாவளி இனிப்பு விற்பனையில் இப்போ இது தான் ட்ரெண்டு!
- by David
- Oct 25,2024