கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் குழந்தை இறப்புகள் குறைவாக உள்ள மாவட்டங்களின் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதற்காக, சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் கோவை மாவட்டத்திற்கு விருதும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இது குறித்து கோவை மாநகராட்சி கூறியதாவது :-

சென்னையில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற மாநில அளவிலான பொது சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தின் போது 2024-2025-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம், மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் டாக்டர்.முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டம் வழங்குதல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு முதல் மூன்று இடத்தை பிடித்த மாவட்டங்களுக்கு தேசிய சுகாதார குழும இயக்குநர் மற்றும் பொது சுகாதார இயக்குநர் மூலம் பாராட்டு சான்றுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate) 1000 குழந்தைகளுக்கு 5.5 குழந்தைகள் என்ற குறைந்த அளவில் உள்ளது. இதில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தை இறப்பு விகிதம் 1000 குழந்தைகளுக்கு 3.9 குழந்தைகள் என்ற குறைவான அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், தமிழ்நாட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 'டாக்டர்.முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டம்' வழங்குவதில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களில் கோயம்புத்தூர் மாவட்டம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட தொகையில் 95.5 சதவீதம் தொகையை கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கி மாநிலத்திலேயே மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி அனுமதிக்கப்பட்ட தொகையில் 99.9 சதவீதம் (ரூ.8,12,89,000) கர்ப்பிணி தாய்மார்களுக்கு கோயம்புத்தூர் மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கான விருது வழங்கும் விழாவில் கோயம்புத்தூர் மாவட்டம் சார்பில் கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி, முன்னாள் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அருணா மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மாநகரநல அலுவலர் மரு.மோகன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை பெற்றனர்.