கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் சர்வதேச தரம் கொண்ட கிரிக்கெட் மைதானத்தை அமைக்க அரசு முதல்கட்ட முயற்சிகளை எடுத்துள்ளது.

இந்த மைதானத்தின் வடிவமைப்பு பணிகளை மேற்கொள்ள அதற்கு முறையாக தேர்ந்தெடுக்கப்படும் வடிவமைப்பு நிறுவனத்திடம் பணி ஆணையை அரசு வரும் அக்டோபர் மாதத்தில்  வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்க செப்டம்பர் 26 - 27 வரை கடைசி நாளாக உள்ள நிலையில், அதற்கடுத்து வடிவமைப்பு பணிக்கான நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்படும்.

ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்கும் எந்த ஒரு நிறுவனத்திடமும் குறிப்பிட்ட ஒரு கிரிக்கெட் மைதானத்தை போல கோவை மைதானம் இருக்கவேண்டும் என எந்த கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை ஆனால் வடிவமைப்பு பணிக்கான ஆலோசகர்கள் தேர்வான பின்னர், தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சில கிரிக்கெட் மைதானங்களுக்கு அவர்களை அழைத்துத் சென்று வடிவமைப்பு ஆலோசிக்க திட்டமுள்ளதாக தெரியவருகிறது.

கோவையில் அமையும் இந்த மைதானத்தை எத்தனை கோடி மதிப்பீட்டில் அமைக்கலாம் என்பது பற்றி வடிவமைப்பு செய்யும் குழு சமர்ப்பிக்கும் திட்ட அறிக்கையை வைத்து தான் மதிப்பீட்டு செய்யப்படும்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள MA சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் 13 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. கோவையில் ஒண்டிப்புதூரில் 20 ஏக்கர் நிலமுள்ளது. எனவே எல்லா வசதிகளும் கொண்ட பிரமாண்டமான மைதானமாக இதை உருவாக்க நிலம் போதிய அளவு உள்ளது.