வாழைப்பழம் விரும்பி சாப்பிடும் நபர்கள் கவனத்திற்கு
- by David
- Jul 09,2025
பல பழங்களை அந்தந்த சீசனுக்கு மட்டுமே சாப்பிட முடியும் என்றாலும் வாழைப்பழம் வருடம் முழுவதும் கிடைக்கும். எப்போது வேண்டுமானாலும் அதை சாப்பிடலாம்.
வாழையை பழமாக எடுத்து தூரத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு/ சந்தைகளுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு சென்றால், பயணிக்கும் நாட்களிலேயே அது வீணாக வாய்ப்பு அதிகமுள்ளது. எனவே அவ்வாறு ஆவதை தடுக்க வியாபாரிகள், வாழையை காயாகவே பெற்று, அதை அவர்கள் விற்க தீர்மானிக்கப்படும் சந்தைக்கு அருகே சில முறைகளை பயன்படுத்தி பழுக்க வைக்கின்றனர்.
எத்திலீன் வாயு (Ethylene gas) மூலம் வாழை உள்ளிட்ட பழங்களை பழுக்க வைக்க உணவு பாதுகாப்பு துறை அனுமதி வழங்கியுள்ளது. என்றாலும் அதற்கான சரியான வழிகளில் அதை செய்யவேண்டியது அவசியம் என கூறியுள்ளது. இது பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
அதே சமயம் கார்பைட் வாயு அல்லது அசீட்டலைன் வாயு போன்றவை கொண்டு செயற்கையாக பழங்களை பழுக்க வைக்க உணவு பாதுகாப்பு துறை அனுமதி வழங்கவில்லை. அனுமதிக்கப்பட்ட எத்திலீன் வாயு விலை அதிகம் என்பதால் வியாபாரிகள் சிலர் பாதுகாப்பற்ற மற்றும் தடைசெய்யப்பட்ட கார்பைட் வாயு போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட அனுமதிக்கப்படாத வாயுக்களை கொண்டு பழுக்கவைத்த பழங்களை உண்டால் அது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதுகுறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தினமலர் நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் கூறியதாவது :-
''வாழைப்பழம் 'எத்தலின் ரைப்பனர்' விதிமுறைப்படி பயன்படுத்த அனுமதி உண்டு. நேரடியாக பழங்கள் மீது படும்படியோ, ஸ்பிரே செய்யவோ அனுமதியில்லை. சிலர் சீக்கிரமாக பழுக்க வைக்க இதனை ஸ்பிரே செய்கின்றனர். இதன் காரணமாக, வாழைப்பழங்களின் தோல்கள் சீக்கிரமாக மாறிவிடும். இயற்கையாக இருப்பின், வாழைப்பழத்தோல் ஒரே மாதிரியாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். செயற்கை ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருந்தால், ஓரிடத்தில் மஞ்சளாகவும், சில இடங்களில் பச்சையாகவும் இருக்கும்.
தவிர, புள்ளி புள்ளியாக தோலில் கருப்புநிறம் தோன்றினாலே மக்கள் தெரிந்துகொள்ளலாம். அத்தகைய பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால், உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். பழ மார்க்கெட்டுகளில் செயற்கையாக பழுக்க வைப்பது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.