2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. தேர்தலுக்கு 9 மாதங்கள் உள்ளன. இந்த காலத்திற்குள் கோவை மாநகரில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்டங்களை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

அப்படி என்னென்ன திட்டங்கள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும்?

இப்போது தான் ஆரம்பித்தது போல இருந்த ஹாக்கி ஸ்டேடியம் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்று வரும் இந்த திட்டம் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் அமைந்து வருகிறது. இந்த திட்டம் 50%க்கு மேல் நிறைவேறி உள்ளது. இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், இந்த திட்டம் கண்டிப்பாக அதற்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கு புறவழி சாலை திட்டம் ஆகஸ்ட் 2023ல் துவங்கியது.மொத்தம்  32.4 கிமீ. நீளம் கொண்ட இந்த புறவழிச்சாலையை 3 பகுதிகளாக அமைக்கபடுகிறது.

மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை முதல் பகுதி (11.80 கி.மீ) ,மாதம்பட்டி முதல் கணுவாய் முதல் இரண்டாம் பகுதி (12.10 கி.மீ), கணுவாய் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மூன்றாம் பகுதி (8.52 கி.மீ) ஆக பிரிக்கப்பட்டு உள்ளது.

முதல் பகுதியில் 11.80 கி.மீ நீளத்திற்கு அமையும் சாலையில் 7.5 கி.மீ தூரத்திற்கு சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. முதல் பகுதி பணிகளில் மதுக்கரை மைல்கல் வழியே மேம்பாலம் கட்டும் பணி துவங்கி உள்ளது. மாதம்பட்டியில் மேம்பாலம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறுகிறது.

இந்த திட்டத்தின் முதல் பகுதி பணிகளில் 70% க்கும் மேல் பணிகள் நிறைவடைந்து உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் சாலைகள் தொடர்பான பணிகளை முடித்திடவும் அதற்கு அடுத்து சில மாதங்களில் மேம்பாலத்தை முடித்திடும் இலக்குடன் பணிகள் நடக்கின்றன.

காந்திபுரம் பகுதியில்  ரூ.300 கோடி மதிப்பீட்டில், 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில், 8 தளங்களுடன் அமைகிற பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

தற்போது 4ம் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. மொத்தம் 40% பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ஜனவரி 2026ல் இதை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

கோவை அவிநாசி சாலை பகுதியில் 10.1 கி.மீ. தூரத்திற்கு அமைந்துவரும் மேம்பால திட்ட பணிகள் 95% முடிவு பெற்றுள்ளது. ஹோப்ஸ் பகுதியில் ரயில்வே பாலம் மேலே 52 மீட்டருக்கு இரும்பு பாலம் பொருத்தப்படும் பணிகள் நடைபெறுகிறது. இது இன்னும் 4-5 நாட்களில் முழுதாக நிறுவப்படும்.

அதன் பின்னர் பாலம் தொடர்பான பிரதான பணிகள் இம்மாதம் நிறைவடையும். ராம்ப் பணிகள் உள்ளிட்ட சில பணிகள் மட்டும் சில காலத்திற்கு பின்னர் நிறைவுபெறும் சூழல் உள்ளது.

இந்த மொத்த திட்டப்பணியும் 30.7.2025க்குள் முடிக்கப்படும் என பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார்.

அதே போல தான் செம்மொழி பூங்கா திட்டமும். கோவை காந்திபுரம் மத்திய சிறை மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த திட்டபணியின் முதல் கட்டம் 45 ஏக்கர் நிலப்பரப்பில் நடந்துவருகிறது. பூங்கா, மாநாடு மையம் என 2 பெரும் பிரிவுகளாக முதல் கட்ட பணிகள் நடக்கிறது.

பூங்கா தொடர்பான பணிகள் கிட்டத்தட்ட 80% மும், மாநாடு மையம் தொடர்பான பணிகள் கிட்டத்தட்ட 85%மும் நிறைவேறி உள்ளது. இந்த பணியும் விரைவில் முடிவடைய உள்ளது.

எனவே தேர்தலுக்குள் இந்த பணிகள் எல்லாம்  நிறைவடையும், மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நம்பலாம்.