கோடை காலங்களில் மாலை 6:30 மணி வரை நீடிக்கும் வெப்பம் கலந்த வெளிச்சம்  இன்று (30.4.2024) கோவை மாநகரின் சில இடங்களில் மாலை 5:30 மணி அளவில் குறைந்து லேசான மேகமூட்டம் தென்பட்டது.

கத்திரி வெயில் துவங்கபோது என எல்லோரும் சொல்லிவரும் நிலையில் வானிலையில் சட்டென நிகழ்ந்த மாற்றம் குறித்தும், கோவையில் அடுத்த சில நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்தும் கேட்டறிய, கோவை வெதர் மேன் என்றழைக்கப்படும் சந்தோஷ் க்ரிஷிடம் கேட்கையில், அவர் கூறியதாவது:-

கோவைக்கு உச்ச கட்ட கோடை சீசன் என்பது ஏப்ரல் மாதத்தில் தான். பலரும் நினைப்பதற்கு மாறாக மே மாதத்தில் நமக்கு வெயில் உச்சம் அடையாது. படிப்படியாக குறையத்தான் போகிறது.

கோவையில் தற்போது வெப்பம் 39 டிகிரி  செல்ஸியஸ் வரை பதிவாகிறது. நேற்று 39.8 டிகிரி வரை சென்றது. அடுத்த 2 நாட்களுக்கு 38-39 டிகிரி வெப்பம் நிலவும். வெள்ளிக்கிழமையில் இருந்து 37-38 டிகிரி வரை நிலவும், அடுத்த வாரத்தில் 36 டிகிரி வெப்பம் வரை இருக்கும்.

வெள்ளிக்கிழமை முதல் கோவையில் ஆங்காங்கே இடியுடன் மழை பொழியும். ஞாயிறு முதல் மாநகருக்குள் மழை பொழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் வரக்கூடிய நாட்களில் பரவலாக பொழியும்.

மே மாதம் இறுதியில் வெப்பம் 34-35 டிகிரி வரை இருக்கும். ஆனால் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சென்னை போன்ற மாவட்டங்களில் இதற்கு பின்னர் தான் வெயில் தீவிரமாக இருக்கப்போகிறது.