கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் 'வெஸ்ட் நைல் ஃபீவர்' எனும் வைரஸ் தொற்றால் சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் பாதிக்கப்பட்டனர்.

மிகவும் ஆபத்தான வைரஸ் தொற்றுகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த வெஸ்ட் நைல் ஃபீவரால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது நலமாக உள்ளனர் எனவும் வீடு திரும்பி உள்ளனர் எனவும் கேரளா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் இதுகுறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.  

இந்தத் தொற்று குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்பது பற்றியும் இதனுடைய பாதிப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது குறித்தும், கோவையை சேர்ந்த பொது மருத்துவ நிபுணர் டாக்டர் ஆதித்யன் குகனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

கொசு மூலம் பரவக்கூடிய இந்தத் தொற்று, உலகில் முதல் முதலாக ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் உள்ள 'வெஸ்ட் நைல்' எனும் மாவட்டத்தில் 1937 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டது.  அதனால் இந்தத் தொற்று வெஸ்ட் நைல் ஃபீவர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த வைரஸ் தொற்றை பரப்பக் கூடியது 'கியுலெக்ஸ்' எனும் வகை கொசுக்கள் தான். இந்த வைரசால் பாதிக்கப்பட்ட கொசு மனிதர்களை கடிக்கும் பொழுது அந்தத் தொற்று மனிதர்களுக்கும் பரவுகிறது.

சில வகை பறவைகள் உடலில் இந்த வைரஸ் இருக்கும். அப்படிப்பட்ட பறவைகளை இந்த கியுலெக்ஸ் வகை கொசுக்கள் கடித்த பின்னர் மனிதர்களையும் கடிக்கும் பொழுது அதன் மூலமாக மனிதர்களுக்கு இந்த தொற்று ஏற்படுகிறது. அவ்வாறு தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, கழுத்துப் பகுதிகளில் வலி ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.

இதுவரை உலக அளவில் இந்தத் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு இதுபோன்ற லேசான அறிகுறிகளே இருந்துள்ளன. ஆனால் 20 சதவீதம் பேருக்கு இந்தத் தொற்றால் ஏற்படக்கூடிய தீவிரமான பின்விளைவுகள் நிகழ்ந்துள்ளன.

இந்த 'வெஸ்ட் நைல் ஃபீவர்' மூலம் மூளை நேரடியாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதுவே இதன் தீவிரமான பின்விளைவாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு மூளை பாதிப்படைவதால் வலிப்பு, வாதம் போன்றவை ஏற்படலாம்.

இன்னும் தீவிரமாக தொற்றும் பாதிப்பு இருந்தால் பாதிக்கப்பட்டவருக்கு ஜப்பனீஸ் என்சிபிலைட்டஸ் (Japanese Encephalitis) எனும் நோய் ஏற்படலாம். இதன் மூலமாக மூளையில் உள்ள திசுக்களில் பாதிக்கப்பட்டு அதனால் அவர்கள் கோமாவிற்கு செல்லவும் அதன் பின் மெல்ல மெல்ல பல உறுப்புகள் செயலிழப்பு ஏற்படவும் இறுதியாக இறந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் இது இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படக்கூடிய 20 சதவீதம் பேருக்கு மட்டுமே ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது இந்த தொற்றுக்கு தடுப்பூசி என்பது இல்லை என்றாலும் இந்தத் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சம்பவம் இதுவரை நடைபெற்றதில்லை, அவ்வாறு பரவவும் செய்யாது என்று கருதப்படுகிறது.

நாம் செய்ய வேண்டியது என்ன?

தற்போது இந்தத் தொற்று கேரளாவில் மட்டும் தான் உள்ளது. மேலும் இது மனிதர்களிடமிருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்பில்லை என்பதால் நாம் அச்சம் கொள்ள தேவையில்லை.

ஆனால் அதே சமயம் சில நல்ல வழக்கங்களை பின்பற்றுவதால் கொசுக்களில் இருந்து நமக்கு ஏற்படக்கூடிய எந்த பாதிப்பாக இருந்தாலும் அதை தவிர்த்துக் கொள்ள முடியும்.

எனவே வீடுகளில் எங்காவது தண்ணீர் தேங்கி நின்றாலோ, குப்பைகள் நிறைந்து ஒரு பகுதி பல நாட்களாக இருந்தாலோ, தண்ணீர் தொட்டிகள் திறந்த படி இருந்தாலோ அதை கவனித்து சரி செய்ய வேண்டும்.உறங்கும் போது கொசுவலையின் பாதுகாப்பில் உறங்குவது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.