சில நாட்களுக்கு முன்னர் கோவை மாநகராட்சியின் எல்லைகளை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு கோவை மாவட்ட நிர்வாகத்திடம் கருத்துரு கோரப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகின. 

இது தொடர்பாக கோவை மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளிடம் கருத்துக்கேட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இதை தொடர்ந்து கோவை மாநகராட்சியுடன் இணையவுள்ள கிராமங்கள் என்ற தலைப்புடன் கூடிய வரைபடம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இது உண்மை என்றே பலரும்  நம்பினர். அதில் வெள்ளமடை, அக்ராஹாரசாமக்குளம், கீரணத்தம், நீலாம்பூர், இருகூர், மலுமிச்சம்பட்டி, தீத்திபாளையம், வேடப்பட்டி, பண்ணிமடை, உள்ளிட்ட 20 கிராமங்கள் அடங்கியிருந்தது. 

இதுபற்றி கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், " சமூக வலைத்தளங்களில் பரவிய அந்த வரைபடம் கோவை மாநகராட்சி தரப்பில் உருவாக்கப்பட்டது அல்ல.  கோவை மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய திட்டமுள்ளது ஆனால் அதற்குள் எந்தெந்த பகுதிகளை சேர்க்கலாம் என இன்னும் நாங்கள் இறுதிசெய்யவில்லை. இதுபற்றிய வரைவு அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை," என கூறினார்.

கோவை மாநகருக்கு அருகே உள்ள சில பஞ்சாயத்துகளை மாநகருடன் இணைக்க மாநகராட்சி ஆலோசித்து  வருகிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர், அதற்கு அடுத்து வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, சமர்ப்பிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.