கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் 'ஃபியஸ்ட்டா 25' எனும் இரண்டு நாள் சர்வதேச தொழில்நுட்ப கலாச்சாரத் திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கி இன்று நிறைவடைந்தது. இதில் 15,000க்கும் அதிகமானோர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

நேற்று நடைபெற்ற 'ஃபியஸ்ட்டா 25'ன் துவக்க நிகழ்வை கே.பி.ஆர். குழுமத்தின் தலைவர் ராமசாமி, கல்லூரியின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன், மற்றும் முதல்வர் சரவணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். 
இதில் 100க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் சாராத போட்டிகள் மற்றும் பயிற்சி பட்டறைகளில் பல்வேறுத் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்று மாணவர்களிடையே துறைச் சார்ந்த தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர். அதோடு உணவு, கைவினைப் பொருட்கள், ஆடை, முக ஓவிய அரங்குகள் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 
குறிப்பிடத்தக்க வகையில் இராணுவ ஆயுதக் கண்காட்சி, ஜப்பானிய வீதி, அதிவேக மற்றும் விலையுயர்ந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனக் கண்காட்சி, பள்ளி மாணவர்களுக்கென சிறப்புப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதுமட்டுமின்றி மாணவர்களை கவரும் வகையில் ராட்சத ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டுகள் இடம்பெற்றன.

மேலும் முதல் நாளில் நடைபெற்ற மாபெரும் இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளரும் நடிகருமான பிரேம்ஜி மற்றும் குழுவினர், 2வது நாளில் ராட்சசன் திரைப்பட இயக்குனர் ராம்குமார் இயக்கிவரும் பெயரிடப்படாத திரைப்படத்தின் குழுவினர் விஷ்ணு விஷால், மமிதா பைஜூ மற்றும் '2கே-லவ்' ஸ்டோரி திரைப்படத்தின் குழுவினர் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த சர்வதேச தொழில்நுட்ப கலாச்சாரத் திருவிழா பலதரப்பட்ட மாணவர்களை ஒன்றிணைத்து அறிவு பரிமாற்றம் மற்றும் மாணவர் பிணைப்பில் ஈடுபட வழி வகுத்தது.