கோவை கணபதி பகுதியை சேர்ந்த 52 வயதான திரு.ரங்கராஜன் என்பவருக்கு திடீரென ஏற்பட்ட தலைவலி காரணமாக அவர் 10 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள முன்னணி பல்நோக்கு மருத்துவமனையான ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய மூளை பகுதியில் தீவிரமான ரத்தக்கசிவு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். எனவே அவருக்கு நரம்பியல் மருத்துவர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர் ஆகிய மருத்துவர் அடங்கிய குழுவின் மிக சிறந்த சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அவ்வாறு தீவிர சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி அவர் மூளை சாவு அடைந்தார்.
இதை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் குழு உறுதி செய்தது. அவர் மூளை சாவு அடைந்த விவரத்தை அவருடைய மனைவிக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் அவருடைய உடல் உறுப்புகளை தேவைப்பட்டவர்களுக்கு வழங்கலாம் என்று ஒருமனதாக முடிவு எடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர்.
அண்மையில் தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும் இந்த உறுப்பு தானத்திற்கு ஒரு காரணமாக இருந்து உள்ளது.
அதன்படியே திரு.ரங்கராஜன் அவர்களுடைய கல்லீரல் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி கோவை ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பைலரி அட்ரிஸியா (Biliary Atresia) எனும் நோயால் கல்லீரல் செயலிழப்புக்கு சிகிச்சை பெற்றுவரும் 2.5 வயது குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மற்றொரு பகுதி சென்னையில் உள்ள மருத்துவமனையில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்டது. அவருடைய சிறுநீரகங்கள் திருச்சியில் சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு வழங்கப்பட்டது.
திரு.ரங்கராஜன் அவர்களுடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்த மிக உயரிய செயலுக்கு அவருடைய குடும்பத்தினருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.
மூளை சாவடைந்த நபர் செய்த உடல் உறுப்பு தானத்தால் ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புது உயிர் பெறும் குழந்தை
- by David
- Nov 06,2023