தொழில்துறையினர் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு விதிக்கப்பட்ட அதிகபடியான கட்டணங்களை ரத்து செய்யவேண்டுமென தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் தரப்பில் இதுவரை 8 கட்ட போராட்டங்கள் நடந்ததுள்ளது. 

கடந்த பிப்.5ம் தேதி செய்தியாளர்களை இந்த கூட்டமைப்பினர் சந்தித்த போது, தமிழக அரசு 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவிக்கும்போது தொழில்துறையினர் முன்வைத்துள்ள மின்கட்டணம் குறித்த கோரிக்கைகளை ஏற்று அரசு அறிவிப்புகளை வெளியிடும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு அறிவிப்பு இல்லை என்றால் தாங்கள் கையில் எடுக்கும் அடுத்த கட்ட முயற்சி அரசியல் தாக்கம் ஏற்படுத்த கூடியதாக இருக்கும் என கூறியிருந்தனர்.

இந்நிலையில் வரவுள்ள 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக தரப்பில் அதற்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு இன்று கோவையில் உள்ள மக்களை சந்தித்து அவர்களின் தேவைகள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்து இந்த தேர்தலுக்கான அறிக்கையை தயாரிக்க தனித்தனியே கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர்.

இந்த இரண்டு நிகழ்விலும் தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்ஜெயபால் உடனான குழு பங்கேற்று தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினரின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை மனுவாக வழங்கினர். அவை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியிடமும், அதிமுக முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணியிடமும் வழங்கப்பட்டது. 

இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயபால் கூறுகையில்:-

திமுக நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் நாங்கள் பங்கேற்று, தமிழகத்தில் தொழில்துறையினர் சந்தித்து வரும் துயரங்கள் பற்றி எடுத்து கூறியுள்ளோம். குறிப்பாக தொழில்த்துறையினருக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு விதிக்கப்பட்ட டிமாண்ட் சார்ஜ், பீக் ஹவர் சார்ஜ் ஆகிய கட்டணங்கள் இதே போல தொடர்ந்து வந்தால் தமிழகத்தில் உள்ள சுமார் 13 லட்சம் தொழில்முனைவோர்களும், அவர்களை நம்பி உள்ள 2 கோடி பணியாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை கூறி, எங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை  வழங்கியுள்ளோம்.

எங்களுக்கு எந்த கட்சி என்பது முக்கியம் அல்ல, எங்கள் துறைக்கு யார் உதவி செய்கின்றனர் என்பது தான் முக்கியம் என ஆளும் கட்சியினரிடம் கூறியுள்ளோம்.

அதிமுக நடத்திய கூட்டத்திலும் பங்கேற்று, எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியுள்ளோம்.

நாங்கள் கட்சி சார்பு இல்லாதவர்கள். தொழில்துறையின் கஷ்டங்களை உணர்ந்து அரசு பட்ஜெட்டில் சாதகமான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு அறிவிப்பு எதுவும் இல்லை என்றால் அதன் பின்னர் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் அறிவிப்போம். எங்கள் துறைக்கு துணை நிற்பவர்களுக்கு தான் நாங்கள் இம்முறை ஆதரவாக இருக்க முடியும்.

இவ்வாறு தெரிவித்தார்.

பீக் ஹவர்ஸ் கட்டணத்தை நிரந்தரமாக ரத்து செய்தல், சொந்த முயற்சியில் சோலார் மூலம் மின்சாரத்தை தங்கள் பெறுவதற்க்கு அரசுக்கு யூனிட் ஒன்றுக்கு தற்போது செலுத்தவேண்டி உள்ள 76 பைசா கட்டணத்தை ரத்து செய்தல், மற்றும் 430% உயர்த்தப்பட்ட டிமாண்ட் சார்ஜ் முற்றிலும் திரும்ப பெறுதல் ஆகியவை இக்கூட்டமைப்பினர் முன்வைக்க கூடிய முக்கிய கோரிக்கைகளாக உள்ளது.