கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 'டைலர் ராஜா' வை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!
- by CC Web Desk
- Jul 16,2025
1998 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவை வந்த பாஜக தலைவர் அத்வானியை கொலை செய்யும் நோக்கில் அல்-உம்மா எனும் பயங்கரவாத அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர்.
14.2.1998 கோவையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில், அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான சாதிக் ராஜா என்கிற டைலர் ராஜா தலைமறைவாக இருந்து வந்தார்.
28 ஆண்டுகள் ஆக தலைமறைவாக இருந்த அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினரால் ஜூலை 10, 2025 கைது செய்யப்பட்டு, அவரை பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வந்தனர். அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து டைலர் ராஜாவை போலிசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.இந்நிலையில் இன்று கோவை 5வது குற்றவியல் நீதிமன்றத்திற்கு டைலர் ராஜாவை போலிசார் அழைத்து வந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, டைலர் ராஜாவை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.