செப்டம்பர் மாதத்தில் கோவை மேற்கு புறவழி சாலை திட்டத்தின் இரண்டாம் பகுதி பணிகள் துவங்குமா?
- by CC Web Desk
- Jul 12,2025
கோவை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கு புறவழி சாலை திட்டம் ஆகஸ்ட் 2023ல் துவங்கியது. மொத்தம் 32.4 கி.மீ. நீளம் கொண்ட இந்த புறவழிச்சாலை 3 பகுதிகளாக அமைக்கபடுகிறது.
மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை முதல் பகுதி (11.80 கி.மீ), மாதம்பட்டி முதல் கணுவாய் முதல் இரண்டாம் பகுதி (12.10 கி.மீ), கணுவாய் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மூன்றாம் பகுதி (8.52 கி.மீ) ஆக பிரிக்கப்பட்டு உள்ளது.
முதல் பகுதி ரூ.250 கோடி மதிப்பில் நடைபெற்றுவருகிறது. இதில் 11.80 கி.மீ நீளத்திற்கு அமையும் சாலையில் 7.5 கி.மீ தூரத்திற்கு சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. முதல் பகுதி பணிகளில் மதுக்கரை மைல்கல் வழியே மேம்பாலம் கட்டும் பணி துவங்கி உள்ளது. மாதம்பட்டியில் மேம்பாலம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறுகிறது.
முதல் பகுதி பணிகளில் 70% க்கும் மேல் நிறைவடைந்து உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் சாலைகள் தொடர்பான பணிகளை முடித்திடவும் அதற்கு அடுத்து சில மாதங்களில் மேம்பாலத்தை முடித்திடும் இலக்குடன் பணிகள் நடக்கின்றன.
இந்த நிலையில் மாதம்பட்டி முதல் கணுவாய் முதல் வரும் இரண்டாம் பகுதி தொடர்பான பணிகளை ரூ.368 கோடி மதிப்பில் செயல்படுத்த நெடுஞ்சாலை துறை தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பகுதி பணிகளுக்கு தேவையான நிலம் 90%க்கும் மேல் கையகப்படுத்தப்பட்டுவிட்டது.
இந்த பகுதி பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில் துறை ரீதியான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதும் அந்த நிதி விடுவிக்கப்படும். அதன் பின்னர் டெண்டர் கோரப்பட்டு பணிகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். இந்த பகுதி பணிகளுக்கு விரைவாக அனுமதி கொடுக்கப்பட்டால் செப்டம்பர் மாதத்தில் வேலைகள் துவங்க வாய்ப்புள்ளது.
கணுவாய் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை (8.52 கி.மீ) மூன்றாம் கட்டப் பணிகளை ரூ.220 கோடி மதிப்பில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது நெடுஞ்சாலை துறை.