கோவை காந்திபுரம் மத்திய சிறை மைதானத்தில் நடைபெற்றுவரும் செம்மொழி பூங்கா திட்ட பணிகளுக்காக நடப்பட்ட மரக்கன்றுகள் தற்போது மெல்ல செடிகளாக வளர்ந்து வருகிறது. முன்பு வெறும் மைதானமாக இருந்த இந்த பகுதி இப்போது பசுமையாக மாற துவங்கியுள்ளது.

செம்மொழி பூங்கா திட்டப்பணி 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டம் (45 ஏக்கர்), இரண்டாம் கட்டம் (120 ஏக்கர்) என பிரிக்கப்பட்டு, தற்போது முதல்கட்ட பணிகள் நடைபெறுகிறது.

முதல் கட்டத்தில் உள்ள 45 ஏக்கரில் 25 ஏக்கருக்கு செடிகள், தோட்டங்கள் உள்ளிட்ட பசுமை பணிகள் நடைபெற்றுவருகிறது. 
மீதம் உள்ள 20 ஏக்கர் நிலத்தில் 1000 சதுர அடியில் உலக தரம் கொண்ட பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்தவெளி அரங்கம், 300 கார்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி மற்றும் சில கட்டமைப்புகள் உருவாகின்றன. 


பல்நோக்கு மாநாட்டு மையத்தின் பணிகள் கிட்டத்தட்ட 70% முடிவடைந்து உள்ளதாக தெரியவருகிறது. சுற்று சுவர் பணிகள், கழிவறைகள், பார்க்கிங் வசதி மற்றும் இதர கட்டுமான பணிகள் பெருமளவு முடிந்துள்ளது.

மீதம் உள்ள பணிகள் வேகமாக நடக்கின்றது. தற்போது வண்ணம் பூசுதல், டைல்ஸ் ஒட்டுதல், வயரிங், உள்புற, வெளிப்புற பணிகள் நடக்கிறது. அடுத்ததாக நுழைவு ஆர்ச் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.
ஜூன் மாதத்தில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த பூங்காவில் தமிழன்னைக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் தமிழ்த்தாய் சிலை நிறுவப்பட உள்ளது.