சுமார் ரூ.10.59 கோடி மதிப்பில் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு புது வாகன நிறுத்துமிடம் கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அதன் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இதற்கான டெண்டர் கோரியுள்ளது. அதில் விமான நிலைய விரிவாக்கத்திற்கான மாஸ்டர் பிளான்-னின் படி,  ரூ.10,59,99,412 மதிப்பில்  கார்கள் நிறுத்துமிடத்தை வேறு இடத்திற்கு (பழைய குடியிருப்பு) மாற்றும் பணிக்கு 20 மே 2025க்குள் டெண்டர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் தேர்வாகும் நிறுவனம் பணியை துவக்கி 9 மாதங்களில் முடிக்கும் படி இருக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

தகவல்கள் படி, புது வாகனநிறுத்துமிடம் 7-8 ஏக்கர் நிலத்தில் அமையும் எனவும், அதில் 524 கார்கள், 160 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தும்படி வசதிகள் இடம் பெறும் எனவும் தெரியவருகிறது. மேலும் இது முதல் கட்ட பணி எனவும், இதற்கடுத்து 2ம் கட்டத்தில் டாக்ஸி, பேருந்துகள், ப்ரீமியம் பார்க்கிங் போன்ற வசதிகள் இடம்பெறும் என தெரியவருகிறது. 

ரூ.1100 கோடி+ மதிப்பில் கோவை விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு 600+ ஏக்கர் நிலங்கள் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு ரூ.2000 கோடி மதிப்பில் 2031ம் ஆண்டுக்குள் நடத்தி முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.