கோவை மாநகராட்சியின் எல்லை 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்டு கூடுதலாக சில பகுதிகள் மாநகராட்சிக்குள் கொண்டுவரப்பட்டது.

2011க்கு முன்பிருந்த மாநகராட்சி பகுதிகளை கொண்ட வார்டுகளுக்கு, அதாவது கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தில் 11 வார்டுகள் (3, 12, 18, 19, 20, 25, 26, 27, 28, 29, 30) , கிழக்கு மண்டலத்தில் 13 வார்டுகள் (24, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61), மத்திய மண்டலத்தில் 20 வார்டுகள் (31, 32, 46, 47, 48, 49, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 80, 81, 82, 83, 84), மேற்கு மண்டலத்தில் 10 வார்டுகள் (41, 42, 43, 44, 45, 71, 72, 73,74, 75) மற்றும் தெற்கு மண்டலத்தில் 6 வார்டுகள் (76, 77, 78, 79, 86, 87) என மொத்தம் பழைய 60 வார்டு பகுதிகளில்  24 மணி நேரமும் 7 நாட்களும் குடிநீர் வழங்கும் 24 x 7 குடிநீர் திட்டம் கொண்டுவர அதிமுக ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டது.

2019ல் துவங்கிய இந்த பணிகள் 2023 டிசம்பர் மாதத்தில் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் இது தாமதமாகியது. 

இந்த திட்டத்தில் 1.5 லட்சம் குடிநீர் இணைப்புகள் பயன் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழலில் இந்த திட்டப்பணிகளின் தற்போதைய நிலை என்ன என்பதும், இது எப்போது முடிவடையும் என்பது பற்றியும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த திட்டத்தின் கீழ், நீர் முதலில் குடிநீர் தொட்டிகளில் சேர 74 கிலோ மீட்டருக்கு பீட்டர் குழாய்கள் அமைக்கவேண்டும். இதுவரை 58.96 கிலோமீட்டருக்கு அதிகமாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீதம் 15.04 கிலோ மீட்டருக்கு அமைக்கவேண்டும். 

தொடர்ச்சியாக வீடுளுக்கு தண்ணீர் சென்று சேர வேண்டும் என்றால் அதற்கான விநியோக குழாய்கள் அமைக்க வேண்டும். மொத்தம் 1744 கிலோ மீட்டருக்கு குழாய்கள் அமைக்கவேண்டும் என்ற நிலையில் இதுவரை 1,684.50 கிலோ மீட்டருக்கு குழாய்கள் அமைக்கப்பட்டு விட்டது. மீதம் 59.5 கிலோமீட்டருக்கு தான் குழாய்கள் அமைக்கவேண்டும். அந்த பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் 33 குடிநீர் தொட்டிகள் அமைக்கவேண்டும். இதில் 25 இடங்களில் தொட்டி கட்டும் பணிகள் முடிந்துள்ளன. மேலும் 8 இடங்களில் பணிகள் மீதம் உள்ளன. மொத்தம் தற்போது வரை இந்த 24x7 குடிநீர் திட்டத்தில் 82% பணிகள் நிறைவடைந்து உள்ளது என தெரியவருகிறது.

அடுத்தாண்டு தேர்தல் வர உள்ளதால், இந்த திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டி பணிகள் நடந்துவருகிறது. இந்த திட்டத்திற்கு தேர்வாகி உள்ள ஓர் வார்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைப்புகளை கொடுத்து முடித்தபின்னர் தான் சாலை சீரமைப்பு பணிகளை நிறைவேற்ற முடியும் என்பதால், கவுன்சிலர்கள் தரப்பில் இருந்து இந்த பணியை விரைந்து முடித்து கொடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே ஆகஸ்ட் 2025ல் இந்த திட்டப்பணியை முற்றிலுமாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது.