அவிநாசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் உப்பிலிபாளையம் சிக்னல் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் 2020 முதல் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் 98% நிறைவு பெற்றுள்ளது.

ஜி.டி.நாயுடு அருங்காட்சியகம், நவ இந்தியா பீளமேடு துணை அருகே, பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி அருகே, வரதராஜபுரம் சிக்னல் அருகே, சி.ஐ.டி. கல்லூரி அருகே, பி.எஸ்.ஜி. கலை கல்லூரி எதிரே உள்ள இடங்களில் ஏறுதளம்/இறங்கு தளம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. பி.ஆர்.எஸ் மைதானம் அருகே அமைந்துள்ள ஏறுதளம் குறித்து வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பதால் அதுமட்டும் பாதியில் நிற்கின்றது.

ஹோப்ஸ் சாலை பகுதியில் ரயில்வே பாலம் ஏற்கனவே இருப்பதால், அங்கு தூண்களை நிறுவுவது சாத்தியமில்லாமல் இருந்தது.

எனவே ரயில்வே பாலத்தின் ஆரம்ப மற்றும் முடிவு பகுதியின் அருகே அமைக்கப்பட்டுள்ள தூண்களின் இடையே உள்ள 52 மீட்டர் இடைவெளியைக் இணைக்க 900 டன் எடை கொண்ட மிக பெரும் இரும்பு பாலம் சமீபத்தில் பொருத்த துவங்கினர்.

தற்போது இந்த பணிகள் முடிவடைந்து உள்ளது. இரும்பு பாலம் இந்த இடைவெளியில் பொருத்தப்பட்டு, அதன் மேல் தார் சாலை அமைக்கும் பணி பெருமளவு நிறைவேறி உள்ளது.

மேம்பாலத்தின் மேற்பகுதியில் சாலைகள் போடப்பட்டுள்ளது. தடுப்பு சுவர்கள் அமைப்பது, மத்திய தடுப்பு, உயர் மின் விளக்குகள் பொருத்துவது, பாலத்திற்கு கீழேயும் மின் விளக்குகள் பொருத்துவது, மழைநீர் வடிகால்கள் அமைப்பது, வண்ணம் பூசுவது போன்ற பணிகள் நிறைவேறியுள்ளது.

விரைவில் சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும், அக்டோபர் மாதத்தில் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தகவல்கள் வெளி வந்துள்ளது.

இதற்கு அடுத்து கோல்ட்வினஸ் பகுதியில் இந்த பாலம் முடியும் இடத்தில் இருந்து சிறு இடைவெளி விட்டு அந்த பகுதி முதல் நீலாம்பூர் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி துவங்க வாய்ப்புள்ளது. இதற்கு ரூ.700 கோடி தேவைப்படும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிவடைய உள்ளது. மெட்ரோ திட்டத்திற்காக இந்த பாலம் 2 அடுக்கு மேம்பாலமாக உருவாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

Photos: Biju