வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் ஒரு சோகம் ... 15 வயது சிறுவன் மரணம்
- by David
- May 13,2025
இம்மாதம் 31 தேதியுடன் கோவை வெள்ளியங்கிரி மலை ஏற வழங்கப்பட்ட அனுமதி முடிவு பெறுகிறது. இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள், மலை ஏற ஆர்வம் கொண்டவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறி வருகின்றனர்.
நேற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஷ்வா எனும் 15 வயது சிறுவன் அவருடைய அப்பா முருகன் மற்றும் சொந்தபந்தங்கள் சிலருடன் மலை ஏறி, வழிபாடு செய்துவிட்டு இன்று காலை 5 மணி அளவில் கீழே வந்துகொண்டிருந்தார். 3ம் மலை வந்த நிலையில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை விஷ்வாவின் தந்தை மற்றும் உறவினர் வனத்துறைக்கு தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் அவரை டோலி கட்டி அடிவாரத்துக்கு எடுத்துவந்து பரிசோதித்து பார்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.