உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை கட்டப்பட்டு வரும் 10.1 கிலோமீட்டர் அவிநாசி சாலை மேம்பால பணிகளில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.


ஹோப் காலேஜ் பகுதியில் ஏற்கனவே ஒரு ரயில் மேம்பாலம் இருப்பதால், அங்கு தூண்களை நிறுவுவது சாத்தியமில்லை என்பதால் தற்போதுள்ள தூண்களுக்கு இடையே உள்ள 52 மீட்டர் இடைவெளியைக் இணைக்க இரும்பு பாலம் பொருத்தப்பட உள்ளது. இதற்கான கட்டமைப்புகள் அங்கு தயார் நிலையில் உள்ளது.

அதேபோல தூண்கள் பொருத்தப்பட்ட அணைத்து இடங்களிலும் மேம்பாலத்தின் ஓடுதளத்திற்கான கட்டமைப்புகள் நிறுவப்பட்டுவிட்டன. நவ இந்தியா சாலை வழியே உயரழுத்த மின் கம்பிகள் செல்வதால் அங்குமட்டும் இன்னும் டெக் ஸ்லாப்கள் பொருந்தாமல் உள்ளன.

இந்த மின் கம்பிகளை மின் வாரியம் நிலத்தடியே கொண்டு செல்ல உள்ளது. அது நிறைவேறியதும் இங்கும் டெக் ஸ்லாப் பொருத்தப்பட்டு விடும். 

உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பிரதான ஏறுதள பகுதியில் பணிகள் பெருமளவு முடிந்துள்ளது. அந்த இடமருகே இருக்கும் சி.எஸ்.ஐ. சர்ச் சுற்றுச்சுவர் மேம்பால பணிகளுக்காக இடிக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலைக்காக இடிக்கப்பட்டிருப்பதாக தகவல். அதேபோல பிரதான இறங்கு தளமான கோல்டுவின்ஸ் பகுதியிலும் பணிகள் பெருமளவு முடிந்துள்ளது. தார் சாலைகள் போடப்பட்டுள்ளது. 


பீளமேடு பகுதியில் பி.எஸ்.ஜி. கல்லூரி அருகேயும், ஆர்யா பவன் ஹோட்டல் அருகேயும் ராம்ப் பணிகள் நடந்துவருகின்றன. பன் மால் பகுதியில் ராம்ப் அமைக்க தூண்கள் கட்டும் பணிகள் ஆரம்பித்துள்ளது. ரெசிடென்ஸி ஹோட்டல் மற்றும் ஜி.டி.மியூசியம் அருகே ராம்ப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 

ஆணையர் ஆய்வு 

மேம்பால பணிகள் நடைபெற்று வரும் உப்பிலிபாளையத்தில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ், பகிர்மான குழாய்கள் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள இந்த திட்டத்தை முன்னெடுக்கும் சூயஸ் நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார். படங்கள் : டேவிட் கருணாகரன்