கோவை மாநகரின் பழைய மாநகராட்சிக்கு உட்பட சுமார் 60 வார்டுகளில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுமார் 1,50,000 குடிநீர் இணைப்புகள் இந்த பகுதிகளில் உள்ளன. 1,07,000துக்கும் அதிகமான கட்டடங்களுக்கு மீட்டர் பொருத்தி, இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இணைப்பு வழங்கப்பட 50,000க்கும் அதிகமான வீடுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் உள்ளது. 

ஒரு மாநகராட்சியில் 50,000 குடிநீர் இணைப்புகளுக்கு மேல் 24 மணி நேர இடைநில்லா உயர் அழுத்த குடிநீர் விநியோகிக்கப்படுவது முதல் முறையாக கோவையில் தான் நடைபெறுகிறது என கோவை மாநகராட்சியின் தகவல் படி தெரியவருகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பலமுறை சுத்திகரிக்கப்பட்டு நீரில் குறைந்தது 0.2 PPM அளவு குளோரின் இருக்குமாறு மாநகராட்சியின் குடிநீர் தொட்டிகளை வந்தடைகிறது. இந்த நீரினை குழாயினுள் தொடர்ந்து உள் அழுத்தத்துடன் வீட்டின் சமையலறை வரை கொண்டு செல்ல முடிந்தால் அந்த நீர் முழுமையாக பாதுகாப்பானது. ஆனால் இதற்கு முன்னர் பல்வேறு காரணங்களால் அவ்வாறு நீரோட்டம் தொடர்ந்து உள் அழுத்ததுடன் இருந்ததில்லை.

ஆனால் தற்போது கோயம்புத்தூர் மாநகரின் பழைய மாநகராட்சி வார்டு பகுதிகளின் குறிப்பிட்ட இடங்களில் 24 மணி நேர இடைநில்லா உயர் அழுத்த குடிநீர் விநியோகம் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உள்ள குடிநீர் இணைப்புகளில் வழங்கப்படும்.நீரின் அழுத்தம் குறைந்தது 20 அடி முதல் சுமார் 70 அடி வரை உள்ளது. இந்த அழுத்தமானது வீட்டில் உள்ள மோட்டார்களை பயன்படுத்தாமல் வீட்டு மாடியில் உள்ள தொட்டியில் நேரடியாக நீர் விழும் அளவுக்கு போதுமானதாக இருப்பதாக மாநகராட்சி தரப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் மோட்டார் மின்செலவை மிச்சபடுத்தலாம். மேலும் பொது மக்கள் அனைவரும் குடிப்பதற்கும், சமையலுக்கும் குழாயிலிருந்து நேரடியாக பிடித்து பயன்படுத்த முடியும் என தெரியவருகிறது. மக்கள் தங்களின் மாநகராட்சி குடிநீர் இணைப்பிலிருந்து ஒரு கிளை குழாயை வீட்டு சமையலறை வரை கொண்டு சென்று குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தலாம். நீரை மறு சுத்துகரிப்பு செய்ய தேவைப்பட அளவிற்கு தரமாக பாதுகாப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்திட்டத்தினை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களும் மேற்கொள்ளும் வகையில், இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சரவை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி இணைந்து குழாயிலிருந்து குடிநீரை குடிக்கலாம்  (Drink From Tap) எனும் திட்டத்தை செயல்படுத்வது குறித்த தென் மண்டல கருத்தரங்கை கோவையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடத்தினர். 

இந்த நிகழ்வை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக இயக்குநர் (அம்ரூத் 2.0) இஷா கலியா, கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்; மேலாண்மை இயக்குநர் (தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம்) விவேகானந்தன்; மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். 

இந்த சிறப்பு கருத்தரங்கில் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஆந்திரா, குஜராத், கர்நாடகா, இராஜஸ்தான், தெலுங்கானா, கேரளா, பீகார், கோவா, புதுச்சேரி, அஸ்ஸாம், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் சுமார் 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பாக விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் குழாயிலிருந்து குடியுங்கள் பாதுகாப்பான குடிநீர் என்ற சிறப்பு கையேடும் வெளியிட்டப்பட்டது. 


அதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செயல்படும் 24x7 குடிநீர் விநியோக கட்டுப்பாட்டு அறையினையும் மற்றும் வார்டு எண்.17க்குட்பட்ட சேரன் நகர் பகுதியில்  இணையத்தின் வாயிலாக சுமார் 400 வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதையும் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.