கோவை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை ஏப்ரல் 2023ல் அறிமுகம் செய்யப்பட்டது. திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்கள் வழியே செல்லும் இந்த சேவைக்கு துவக்கத்தில் இருந்தே பயணிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த ரயில் சேவையில் கூடுதல் பெட்டிகள் வழங்கப்பட்டால் அது நன்கு பயன்படுத்திக்கொள்ளப்படும் என பயணிகள் தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், ரயில் பயணிகள் சங்கம் சார்பில் 8 பெட்டிகள் உள்ள இந்த ரயிலை 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலாக தரம் உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் உள்ள பயணிகளிடமிருந்து இந்த ரயிலுக்கு பெரும் தேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

சமீபத்தில் ரயில்வே அமைச்சரை சந்தித்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் இந்த ரயில் சேவைக்கு டிக்கெட்கள் என்றுமே டிமாண்டில் உள்ளது என குறிப்பிட்டு தனது கோரிக்கை கடிதத்தில் இந்த ரயில் பெட்டிகளை அதிகரித்து வழங்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

ரயில் பயணிகள், பயணிகள் சங்கங்கள், தொழில்துறையினர், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் இந்த கோரிக்கையை ரயில்வே வாரியம் ஏற்று விரைவில், கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் பெட்டிகளி்ன் எண்ணிகைகளை அதிகப்படுத்த வேண்டும் என எதிர்பார்த்து வந்த நிலையில் இன்று ஒரு தித்திப்பான தகவல் வெளிவந்துள்ளது.

8 பெட்டிகள் உடன் இயக்கப்படும் கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் 16 பெட்டிகள் கொண்டதாக மாற்றப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் உள்ளிட்டோரின்  பல கால கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளதால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.