கோவை சிறுமுகை அருகே, பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள ஒரு மழைநீர் தடுப்பனை குட்டையில் பல நாட்களாக பதுங்கி இருந்த முதலையை இன்று வனத்துறையினர் சுமார் 5 மணி நேரம் போராடி பிடித்தனர்.

முதலையை பிடிப்பதற்காக இன்று காலை முதல் குட்டையில் இருந்த நீரை மிகப்பெரிய மோட்டார் மூலம் வெளியேற்றி அதை தேடி வந்தனர். தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், குட்டை அருகே இருந்த பாறையின் நடுவில் சென்று பதுங்கி கொண்டது.

இதன் காரணத்தால், அதை பிடிப்பது வனத்துறையினருக்கு சவாலாக இருந்தது. இந்த நிலையில் மூங்கில் குச்சியில் கயிற்றைக் கட்டி பாறையின் இடுக்கில் மறைந்திருந்த 7 அடி நீளம்  கொண்ட முதலையை  போராடி உயிருடன் வனத்துறையினர் பிடித்தனர்.

முதலை கயிறு மற்றும் வலைகளால் கட்டப்பட்டு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டு, பவானிசாகர் அணை பகுதியில் ஆழம் அதிகமுள்ள இடத்தில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலை பிடிக்கப்பட்ட சம்பவம் அந்த கிராம மக்களிடையே நிம்மதியை கொடுத்துள்ளது.