கோவை உள்ளூா் திட்ட பகுதிக்கான மாஸ்டா் பிளான் (முழுமை திட்டம்) 2025ஐ இன்று வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கோவைக்கான மாஸ்டர் பிளான் கடைசியாக 1994ல் தான் புதுப்பிக்கப்பட்டது. அதற்கடுத்து கோவை மாநகரம் பலகட்ட வளர்ச்சி அடைந்துள்ளது. கோவை மாநகரில் 2041 ஆம் ஆண்டில் 45 லட்சம் மக்கள் வசிப்பார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே அப்போது தேவைப்படும் பொது உள்கட்டமைப்புகள், மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வசதிகள், மேலாண்மை திட்டங்கள் என பலவற்றை கருத்தில் கொண்டு இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறையின் கீழ் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்கத்தால் தயாரிக்கப்பட்ட 1531.57 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கோவை உள்ளூர் திட்டப்பகுதியின் இரண்டாவது முழுமை திட்டத்தை வெளியிட்டார்.

கோவை மாநகரின் வளர்ச்சிக்கு முக்கியமான அவனாக பார்க்கப்படும் இந்த மாஸ்டர் பிளான் GIS எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், உட்கட்டமைப்பு, போக்குவரத்து, சுற்றுசூழல், பொருளாதாரம்,  வீட்டுவசதி போன்ற பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனையின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒரு விரிவான திட்டமாகும்.

கோவை வளர்ச்சிக்கும், பொது மக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் பயனுள்ள இத்திட்டம் இன்று வெளிவந்தது தொழில்துறையினரிடம் வரவேற்ப்பை பெற்றுள்ளது.