'டார்க் வெப்' ஆசாமிகளால் அடிக்கடி அச்சுறுத்தப்பட்டது கோவை மட்டுமல்ல, லிஸ்டில் ஏகப்பட்ட பேர் உள்ளனர் ... தொடர் விசாரணையில் சைபர் போலீஸ்!
- by David
- Oct 04,2025
வெகு ஜனங்களுக்கு 'டார்க் வெப்' என்றால் என்ன என்பதை பற்றி எளிதில் புரிதலை ஏற்படுத்தியது நடிகர் விஷால் நடித்த 'இரும்புத்திரை' படம் தான்.
இன்டர்நெட்-டின் இருண்ட பகுதி தான் இந்த 'டார்க் வெப்'. இதை அவ்வளவு எளிதில் சாமானியர்கள் பயன்படுத்த முடியாது. ஒரு முன் பின் தெரியாத செல் போன் அழைப்பு வந்தால் அதை இன்று 'ட்ரு காலர்' எனும் சாதாரண மொபைல் செயலியை வைத்தே கண்டுபிடித்து விடலாம். வழக்கமான மின்னஞ்சல் தளமான ஜி-மெயில், யாஹூ போன்றவற்றிலிருந்து மின்னஞ்சலோ அல்லது சமூக வலைதள கணக்குகளில் இருந்தோ ஒரு இன்டர்நெட் பயன்பாட்டாளர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் யார் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
ஆனால் 'டார்க் வெப்' மற்றும் 'வி.பி.என்.' எனும் கட்டமைப்பு மூலம் தனது டிஜிட்டல் அடையாளத்தை மறைத்து மாற்று வழியில் மின்னஞ்சல் அனுப்பினால், அனுப்பியவரை கண்டுபிடிப்பது மிக மிக மிக சவாலானது.
சரி இதனால் கோவைக்கு என்ன சவால்?
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், தனியார் கல்வி நிறுவனங்கள், கோவை நீதிமன்ற வளாகம், கோவை சர்வதேச விமான நிலையம், தகவல் தொழில்நுட்ப பெரும் வளாகமான 'டைடல் பார்க்' ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த மிரட்டல்கள் விடுக்கும் நபர்/நபர்கள் தங்கள் அடையாளங்களை 'டார்க் வெப்' மற்றும் 'வி.பி.என்.' மூலம் மறைத்துவைத்திருப்பதால் இவர்கள் யார் என்பதை கண்டறிவது காவல் துறையின் சைபர் பிரிவுக்கு சவாலாக இருந்துவருகிறது. அவர்களை கண்டறிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மட்டுமல்ல ...
இந்த இருண்ட இன்டர்நெட் உலகில் ஒளிந்துகொண்டு கோவை மட்டுமல்லாது சமீபத்தில் சென்னை விமான நிலையம், டெல்லி விமான நிலையம், கல்வி நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, பெங்களூரு சர்வதேச விமான நிலையம் என பல இடங்களுக்கு சமீப காலங்களில் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு ஏன், 3.10.2025 அன்று தமிழக காவல் துறை தலைவர் (டி.ஜி.பி.) அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு சமீபத்தில் காலை 4.10 மணிக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு சில நாட்கள் முன்பு தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் (கிண்டி), நடிகர் விஜய், திரிஷா இல்லம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் வந்தது.
எல்லாம் வெத்து மிரட்டல்
வந்த மின்னஞ்சல் அனைத்துமே வெத்து மிரட்டல்கள் தான் என்பது சோதனையின் இறுதியில் தெரியவந்தது. ஆனால் ஒவ்வொருமுறை இதுபோன்ற மிரட்டல் வரும்போதும் வெடிகுண்டு நிபுணர்கள் துரிதமாக செயல்படுகின்றனர்.
சம்மந்தப்பட்ட இடத்தில் தீவிர சோதனை நடத்தி இறுதியில் தான் வதந்தி என்பதை உறுதிசெய்கின்றனர். எந்த ஒரு மிரட்டலையும் லேசாக எடுத்துக்கொள்ளாமல் செயல்படுகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு இதுபோன்ற மின்னஞ்சல் வந்த போது இரவு முதல் அதிகாலை வரை தீவிர சோதனை நடைபெற்றது.
அடுத்தது என்ன?
'டார்க் வெப்' மற்றும் 'வி.பி.என்.' பயன்படுத்தி வரக்கூடிய மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் உள்ள சவால்கள் பற்றி கோவை மாநகர போலீசார், டெல்லி போலீசார் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து சைபர் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
மக்கள் இதுபோன்ற மிரட்டல்கள் வருவதை அறிந்து அஞ்சவேண்டாம். இதை கையாள தகுதியான நிபுணர்கள், உபகரணங்கள் கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ளது என காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் மக்கள், குறிப்பாக குழந்தைகள் அதிகம் இருக்கக்கூடிய பள்ளிகளுக்கு தொடர்ந்து இதுபோன்ற மிரட்டல்கள் வருவதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி விசாரணையில் திருப்பம் வரும் என எதிர்பார்ப்போம்.