ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், குறைந்த பயண நேரத்துடன் 9 இந்திய நகரங்களை இலங்கையுடன் இணைக்கும் 88 விமான சேவைகளை இயக்குவதாகவும், விரைவில் கோவை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை துவங்க உள்ளதாகவும் கோவை வந்த இலங்கை சுற்றுலா துறை அமைச்சர் குழு தெரிவித்தது.

கோவையில் இலங்கை சுற்றுலா துறை தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில் இலங்கை சுற்றுலா துறையின் துணை அமைச்சர், ருவான் ரணசிங்கே, மற்றும் சுற்றுலா துறை தொடர்பான அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசினர்.

அவர்கள் பேசுகையில் இந்தியாவிலிருந்து இதுவரை இல்லாத அளவில் பயணிகளின் வருகை இலங்கையில் அதிகரித்துள்ளதாகவும், இந்தியா தொடர்ந்து இலங்கையின் முதன்மை சுற்றுலா சந்தை மையமாக திகழ்வதாக தெரிவித்தனர்.

மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லா நுழைவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பகிர்ந்துகொண்டனர்.