கோவை சின்னவேடம்பட்டி ஏரியில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீர் செலுத்தப்படுவதால் மாசு ஏற்படுமா? மாநகராட்சி ஆணையர் கூறுவது என்ன?
- by David
- Jan 24,2025
கோவையின் வடக்கு பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் சின்னவேடம்பட்டி ஏரி அமைந்துள்ளது.
இதுவரை கழிவு நீரால் மாசுபடாத நிலையில் கோவையில் இருக்கக்கூடிய குறைந்த ஏரிகளில் சின்னவேடம்பட்டி ஏரியும் ஒன்றாக உள்ளது. இங்கு சேரக்கூடிய மழை நீர் நிலத்தடிநீர் அளவை புதுப்பித்து விவசாயம் தொடர்ந்து நடைபெற உதவுகிறது. இதை நம்பி ஏராளமான மக்கள் உள்ளனர்.
ஒரு தகவலின்படி, கணுவாய் முதல் சின்னவேடம்பட்டி, கணபதி, பீளமேடு வரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை காக்க, வெள்ள நீர் வடிகாலாகவும், நீர்த்தேக்கமாகவும் சின்னவேடம்பட்டி குளம் இருக்கிறது.
இந்நிலையில் இந்த ஏரியின் அருகே கோவை மாநகரப்பகுதிகளில் உருவாகும் கழிவு நீரில், 'தினசரி 9.9 மில்லியன் (90 லட்சம் +) லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யகூடிடய திறன் கொண்ட' ஒரு நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை அமைத்து, இதன் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை தொழிற்சாலை பயன்பாட்டுக்கு வழங்கவும், சின்னவேடம்பட்டி குளத்தில் தேக்கவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது.
இதுபற்றிய தகவல் வெளியானதும் இந்த திட்டத்திற்கு கவுசிகா நீர்கரங்கள் அமைப்பினர் ஆட்சேபம் தெரிவித்திதனர்.
சின்னவேடம்பட்டி ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை செலுத்தினால் அந்த நீர் விவசாயம் செய்ய உகந்ததாக இருக்காது. சுத்திகரிக்கப்படும் கழிவு நீரில் உள்ள ரசாயணங்கள் மற்றும் கடினத்தன்மையால், இப்பகுதி நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அதேபோல விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்படும். தொடர்ச்சியாக செலுத்தி வந்தால் ஏரி நிரம்பும் சூழல் ஏற்படும், ஆனால் மழை நீர் அதற்குள் சேர முடியாது என அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ஏரி அருகே வரவுள்ள சுத்திகரிப்பு ஆலையில் தினமும் 9.9 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யக்கூடிய திறன் இருக்கும் ஆனால் அது நிறுவப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் முதல் 10 ஆண்டுகளில் தினமும் 2.5 மில்லியன் லிட்டர் நீர் தான் ஏரியில் செலுத்தப்படும். இதனால் ஏரி அச்சப்படும் அளவில் வேகமாக நிரம்பிவிடாது. இந்த ஆலையில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் ஏரியில் செலுத்தப்படுவதால் அங்கு மாசு ஏற்படாது.
இந்த ஆலை நவீன தொழிநுட்பம் கொண்டதென்பதால் அதனால் சுத்திகரிப்பு செய்யப்படும் நீர் நம்மால் பயன்படுத்திக்கொள்ள கூடிய திறன் கொண்டதாக இருக்கும். ஆனால் இதை நாம் பெரும்வாரியாக தொழில் சாலைகளுக்கு தான் தர திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார். மேலும் ஏரியை அருகிலுள்ள ஓடையுடன் இணைக்கும் வெளியேற்றக் கால்வாயை அமைப்பதற்கான ஆய்வு நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.