வருடத்திற்கு 2 கோடிக்கும் அதிகமான பயணிகளை கையாளும் கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடமும், தொழில்துறையினரிடமும் பல ஆண்டுகளாக உள்ளது.

இந்த ரயில் நிலையம் 2023-24 நிதியாண்டில் டிக்கெட் விற்பனை மூலம் மட்டுமே ரூ.345.32 கோடி+ வசூல் செய்துள்ளது. இதை தரமுயர்த்தினால், இதை விட அதிகம் வருமானத்தை தெற்கு ரயில்வேவிற்கு இது வழங்கும் என கூறப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரயில் நிலையத்தை ரூ.700 கோடி மதிப்பில் அரசு மற்றும் தனியார் கூட்டுமுயற்சியில் தரமுயர்த்துவது பற்றி பேச்சுக்கள் எழுந்துவருகின்றன. இதற்கான திட்ட அறிக்கை கூட ஒன்று தயாராகி வருவதாக தகவல் வெளிவந்தது. ஆனால் இத்தனை நாட்கள் ஆகியும் இந்த திட்ட அறிக்கை இறுதியானதாக தகவல் இல்லை.

கோவையை சேர்ந்த தொழில்துறையினர் இந்த திட்ட அறிக்கையை இறுதி செய்து, அதை வேகமாக செயல்படுத்தவேண்டும் என ரயில்வே துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். சென்ற ஆண்டு செப்டம்பரில், இந்த விரிவாக்கம் தொடர்பான பணிகளை தென்னக ரயில்வே துறையின் கட்டுமான அமைப்பு கையில் எடுப்பதற்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியவுடன் அப்பணிகள் துவங்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி, இந்த திட்டத்தில் நிலையத்தின் வடிவமைப்பு, திட்ட மதிப்பீடு ஆகியவற்றில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நிலையத்தின் வடிவமைப்பு இறுதி நிலையில் உள்ளது. இந்த அறிக்கையை இறுதி செய்து, செயல்படுத்த மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கூறியுள்ளார். 

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வடக்கு ரயில் நிலையம், சோமனூர், இருகூர் மற்றும் சிங்காநல்லூர் ரயில் நிலையங்களில் சில தரமுயர்த்தல் பணிகள் மேற்கொள்ள தெற்கு ரயில்வே தரப்பில் டெண்டர்கள் கோரப்பட்டுள்ளது.

கோவையின் முக்கிய ரயில் நிலையமாக உள்ள கோவை ரயில்வே சந்திப்பை விரைவில் மேம்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை இன்றும் தொடர்கிறது.