காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, பெங்களூரு, திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கேரளா அரசு போக்குவரத்து கழகம் மற்றும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்படும் சேவைகளும் இங்கு இருந்து இயங்குகிறது. காந்திபுரம் பகுதியிலேயே திருவள்ளுவர் பேருந்து நிலையம், சென்ட்ரல் பேருந்து நிலையம் மற்றும் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பேருந்து நிலையங்கள் இயக்கப்படுவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க காரணமாக அமைகிறது.

மேட்டுப்பாளையம் சாலையில் 2010 துவங்கி செயல்பாட்டில் உள்ள புது பஸ் ஸ்டாண்டில் இடம் உள்ளதாலும், அங்கு பெரியளவு சேவைகள் இயக்கப்படுவதில்லை என்பதாலும், திருவள்ளுவர் பேருந்து நிலைய சேவைகளை இந்த இடத்திற்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

சமீபத்திய தகவல்கள் படி இந்த பரிந்துரையை அரசு தரப்பினர் தீவிரமாக பரிசீலத்து வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றிய ஆலோசனை அடுத்த சில நாட்களில் மீண்டும் நடைபெறும் எனவும், அடுத்த 1.2 மாதங்களில் இதுகுறித்து தெளிவான முடிவு எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாக தகவல்கள் கூறுகின்றன.

காந்திபுரம் பகுதியில் 3 நவீன நடை மேம்பாலங்கள்  கொண்டுவர மாநகராட்சி தரப்பில் திட்டமிடப்பட்டது. அதில் ஒன்று திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் ஸ்டாண்ட் வரை வரும் என கூறப்பட்டது. இந்த நிலையில், வரும் நாட்களில் பேருந்து நிலையமே இங்கிருந்து மாறும் என்றால், அங்கு வெறும் 2 நடைமேம்பாலங்களே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.