அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற எழுச்சிப் பயணத்தை கோவை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து தொடங்கினார்.

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை மேற்கொள்கிறார்.

சேலத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து காலை புறப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவை அன்னூர் நால்ரோடு பகுதியில் கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

காலை 10 மணிக்கு வனபத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு தரிசனத்தை முடித்துவிட்டு கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது விவசாயிகள் மத்தியில் உரையாடிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவிநாசி அத்திக்கடவு திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.அனைத்தையும் கருத்தில் கொண்டு ₹ 1000 கோடி மதிப்பு அவிநாசி அத்திக்கடவு திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு திட்டம் முடக்கப்பட்டது என்று கூறினார்.

அவிநாசி அத்திக்கடவு இரண்டாவது திட்டத்திற்கு விரைவான திட்டம் செய்யப்பட்டது ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக திட்டம் கைவிடப்பட்டது.விவசாயிகள் வைத்த கோரிக்கை போன ஆட்சியில் தொடங்கப்பட்டது என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாலை 3 மணி அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்க உள்ளார்.

இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், நகர செயலாளர் வான்மதி சேட்,பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தின் முதல் பிரச்சாரக் கூட்டமானது நடைபெற உள்ளது.