கோடை காலம் என்பதால் மக்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா பகுதிகளில் குவிந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா துவங்கி உள்ள நிலையில் நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்ட எல்லை பகுதியான மேட்டுப்பாளையம் கல்லாறு தூரிப்பாலம் அருகே இ-பாஸ் சோதனைச்சாவடியில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில்  நீலகிரி மாவட்ட வருவாய்த் துறையினர்,காவல் துறையினர்சோதனை செய்து வருகின்றனர்.

இங்குள்ள இ-பாஸ் சோதனைச்சாவடியில் மேற்கூரைகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் கொளுத்தும் வெயிலில் கால்கடுக்க நின்று சோதனை சாவடி ஊழியர்கள் இ-பாஸ் சோதனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சோதனைச்சாவடி ஊழியர்கள் கூறுகையில் கடந்த சில மாதங்களாக இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது வார நாட்களில் 6000 வாகனங்களும்,வார விடுமுறை நாட்களில் 8000 வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 500 வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக இ-பாஸ் சோதனைச்சாவடியில் இருந்த மேற்கூரை சிதலமடைந்தும், கம்பங்கள் முறிந்தும்,எப்போது விழுமோ? என்ற அச்சத்தில் வாகனங்களில் இ-பாஸ் சோதனை செய்து வந்தோம். தற்போது அந்த மேற்கூரையும் அகற்றப்பட்டுள்ளது.

இதனால் கொளுத்தும் வெயிலில் நின்று வாகனங்களை சோதனை செய்யும் நிலை உள்ளது. சுற்றுலா பயணிகளும் வெயிலில் நின்று செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே,நீலகிரி மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இங்கு நிரந்தரமாகவே மேற்கூரை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.