6 மாத காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த தேவையான விதிகளை உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளை தவிர பிற சாலைகளின் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு ஆகியவை சரியான தரத்தில் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை மாநில அரசுகள் செய்யவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பொது இடங்களில், தேசிய நெடுஞ்சாலைகளில் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் உள்ளிட்ட இயந்திரமல்லாத வாகனங்களை பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான விதிகளை கொண்டுவரவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

2012ல் கோவையை சேர்ந்த பிரபல எழும்பியல் துறை மருத்துவர் ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவின் மீது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்ட செய்தி தளமான Bar and Bench கூறியுள்ளது. அதிகப்படியான சாலை விபத்துக்கள் நாட்டில் ஏற்படுவதை குறைக்க வேண்டும், அதற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒருங்கிணைந்த முடிவுகளை எடுக்கவேண்டும் என அவர் மனுவில் கூறியிருந்தார்.