கோவை சரவணம்பட்டியில் தெரு நாய்கள், பூனைகளுக்கு ஒரு பெண் தொடர்ந்து உணவு அளித்து வருவதற்கு ஆட்சேபனம் தெரிவித்து வந்த அப்பகுதியில் உள்ள சில குடியிருப்புவாசிகள் அந்த பெண்ணை அச்சுறுத்திய  சம்பவம் தற்போது கவனம் பெற்று உள்ளது.

சரவணம்பட்டி பகுதியில் வீட்டு வேலை செயது வருபவர் ஜெனிபர். இவர் சரவணம்பட்டியில் உள்ள அழகு நகர், லட்சுமி நகர் மற்றும் சில சுற்று பகுதிகளில் உள்ள தெரு நாய், பூனைகளுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டு வருகிறார். மேலும் அவர் தன்னால் முடிந்த வரை நாய்களுக்கு தடுப்பூசி, கருத்தடை ஆகியவற்றை செய்து வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சரவணம்பட்டி அழகு நகர், லட்சுமி நகரை சேர்ந்த சில குடியிருப்புவாசிகள் சிலருக்கு சில காரணங்களால் இது பிடிக்காமல் போக, அவர்கள் அந்த நாய்களை துன்புறுத்தியும்,  ஜெனிபரை அச்சுறுத்தியும் உள்ளனர். நாய்க்கு உணவளிப்பதை கைவிட சொல்லியும் அவரிடம் தகராறு செய்துள்ளனர்.

இதுகுறித்து Helping  Hands for Animal Rights and Protection என்ற விளங்குகள் உரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்பிடம் பேசியுள்ளார் ஜெனிஃபர். அவர்கள் உதவியுடன் காவல் நிலையத்தில் (E 3) இதுபற்றி புகார் தெரிவிக்கையில் காவல் துறையினர் சம்மந்தப்பட்ட குடியிருப்பு சங்கத்தில் இருந்து நபர்களை வரச்சொல்லி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

அதன் பின்னர் தேர்தல் வந்துவிட்டாதால் இந்த புகார் குறித்து காவல் துறை தரப்பில் விசாரணை நீடிக்க கால தாமதம் ஆன நிலையில், இதுபற்றி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் சென்றுள்ளது. 

இன்று கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து ஜெனிஃபரை இந்த புகார் குறித்து விசாரிக்க அழைத்துள்ளனர். அதற்காக ஜெனிஃபர் மற்றும் Helping Hands for Animal Rights and Protection  அமைப்பு சார்பில் செலீனா என்பவரும் வருகை தந்தனர்.

காவல் ஆணையாளரை சந்திப்பதற்கு முன் பேட்டியளித்த செலீனா, இத்தனை நாட்களாக அங்கு எந்தவித பிரச்சனையும் இல்லை எனவும் ஆனால் தற்போது புதிதாக குடிவந்த ஒரு சில நபர்கள் நாய்களுக்கு உணவளிக்க கூடாது என தெரிவிப்பதாகவும், வசதியாக இருக்கும் இடத்தில் இது போன்று அசிங்கமான விஷயங்களை செய்ய கூடாது என கூறுவதாக தெரிவித்தார். மேலும் இவ்வாறு செய்தால் திருட்டு பட்டம் கட்டிவிடுவோம் என மிரட்டியதாக தெரிவித்தார். 

மேலும் அவர்கள் சில நாய்களை வாகனங்களை ஏற்றி கொன்றிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியதாகவும் இது குறித்தும் ஜெனிஃபர் போலிசாரிடம் கூறிய போது சம்பந்தப்பட்டவர்கள் ஜெனிஃபர் மற்றும் அவரது கணவரை மிரட்டியதாக தெரிவித்தார். மேலும் ஜெனிஃபர் கோழி கழிவுகளை எல்லாம் பச்சையாக நாய்களுக்கு போடுவதாக பொய்யாக குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார்.

விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெனிஃபர், நாய்களுக்கு உணவளிக்கலாம் என காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கூறிவிட்டதாகவும் அதே சமயம் குழந்தைகள் விளையாடுகின்ற இடத்தில் உணவளிக்காமல் இதர இடங்களில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இரவு 10 மணிக்கு மேல் உணவளிக்கலாம் என கூறியதாக தெரிவித்தார். மேலும் நாய்களுக்கு உணவளிப்பவர்களை யாரும் அச்சமுறுத்த கூடாது என கூறியதாகவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செலீனா, இரவு நேரத்தில் நாய்களுக்கு உணவளிப்பது சரிதான் என காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் கூறியதாகவும், யாரும் உங்களை தடுக்க கூடாது பயமுறுத்த கூடாது என சட்டங்கள் உள்ளது என கூறியதாக தெரிவித்தார். மேலும் யாரேனும் தடுத்தால் அவர்கள் மீது வழக்கு பதியப்படும் என அதிகாரிகள் கூறியதாகவும் தெரிவித்தார்.