உலக நாடுகள் தற்போது வெளியேறும் கார்பன் அளவை வைத்து மதிப்பிடுகையில், இவ்வாறு நாம் சென்று கொண்டிருந்தால் 2030 ஆம் ஆண்டில் உலகின் வெப்பம் 2.7 ° செல்சியஸ் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில், இப்போது நாம் உணரும் வெப்பமே பலருக்கும் உடல் சோர்வை ஏற்படுத்துகிறது என்றால், பூமி வெப்பமயமாதலால் வருங்காலத்திலும் வெப்பம் மளமளவென உயரும், இதனால் சில உடல் பாதிப்புகளும் மக்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. 

இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை கோவையை சேர்ந்த பொது மருத்துவ நிபுணர் டாக்டர் ஆதித்யன் குகனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:

அண்மையில் அமெரிக்காவில் உள்ள பிரபல ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றது. அதில் 2030க்கு பின்னர் ஏ.சி. என்பது மக்களில் பெரும் பகுதியினர் பயன்படுத்தும் ஒரு வீடு உபயோக பொருளாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது போன்ற சில ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு பல கருத்துக்கள் தற்போது பரவலாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. 

வெப்பகாலங்களில் பலருக்கும் ஏற்படும் பாதிப்பு நீரிழப்பு தான். இந்த நீரிழப்பு ஏற்படும் போது உடலுக்கு தேவையான சோடியம், பொட்டாசியம், மெக்னிசியம் போன்ற சத்துக்களும் உடலை விட்டு வெளியேறும். இவை உடலில் தேவையான அளவு இருந்தால் தான் நரம்புகள், சதை பகுதிகள் சரியாக செயல்பட முடியும்.

எனவே, வெயில் காலத்தில் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க வெறும் குடிநீரை பருகுவதை விட 1 லிட்டர் குடிநீருடன் 1 டம்பளர் லெமன் ஜூஸ் (உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து) கலக்கி குடித்தால், உடல் புத்துணர்வு அடைவதுடன் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

அதிக உப்பு கொண்ட உணவுகளை உண்பதை கோடை காலத்தில் தவிர்க்க வேண்டும், ஏனென்றால், நம்முடைய சிறுநீரகம் நம் உடம்பில் அதிக உப்பு இருக்கிறது என்றால் அதை வெளியேற்ற அதிக நீரை எடுத்துக்கொள்ளும், இதனால் உடலில் உள்ள நீர் அளவு வேகமாக குறைய வாய்ப்புள்ளது. இதுவும் நீரிழப்பை ஏற்படுத்தும். 

எனவே உப்பு அதிகம் கொண்ட எந்த உணவாக இருந்தாலும் அதை உண்பதை தவிருங்கள். குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உப்பு அதிகம் கொண்ட சிப்ஸ் வகைகளை தவிர்க்க வேண்டும். அதேபோல அதிக இனிப்பு கொண்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். 

இதயம் சார்ந்த உடல் நல குறைபாடுகள் உள்ளவர்கள், கீமோதெரப்பி சிகிச்சையில் இருப்பவர்கள், வயதானவர்கள், வலிப்பு நோய் உள்ளவர்கள், வெயில் அதிகம் இருக்கும் நேரமான காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். 

இளைஞர்களும் அவசியமான பணிகள் இல்லை என்றால் இந்த நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கலாம். முக்கிய பணிகளுக்காக வெளியே செல்பவர்கள், வெப்பத்தை வெளியேற்ற கூடிய பருத்தியால் ஆன உடைகளை அணியவேண்டும். தலையை நேரடி வெயிலில் இருந்து மறைத்துக்கொள்ளவேண்டும்.

நமது மூளையின் ஒரு பகுதியில் மூச்சு விடுகையில், வேர்வை வெளியேறுகையில், சிறுநீர் மற்றும் மலம் கழிக்கையிலும் கூட வெப்பம் வெளியேறும். இதை நமது மூளையின் ஒரு பகுதி தொடர்ந்து செய்து வரும். ஆனால் இது வெளியே உள்ள வெப்பத்திற்கு ஏற்ப நடக்கும். இதுவே வெளியே வெப்பம் அதிகமாக நிலவினால் இந்த செயல்முறை பாதிக்கப்படும், உடலில் இருந்து வெப்பம் வெளியேறுவதில் கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஹீட் ஸ்ட்ரோக் கூட ஏற்படலாம். 

அதிக வெயிலால் நமக்கு மட்டும் பாதிப்பா என்றால், இல்லை ... அனைத்து உயிரினங்களுக்கும் தான்.  தெருவில் உள்ள நாய், பூனை துவங்கி, தொழுவத்தில் உள்ள பசுக்கள், வனத்தில் உள்ள விலங்குகள், நீர் நிலைகள் என அனைத்திற்கும் அதிகரிக்கும் வெப்பம் ஆபத்தானது.

எனவே பூமி வெப்பமயமாகுதலை குறைக்கும் நடவடிக்கைகளை நாம் அனைவரும் கையில் எடுப்பது ஒன்று தான் தீர்வு. 

இவ்வாறு அவர் கூறினார்.