நேற்று முதல் திருத்தம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளது. 

இந்த நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை ஒரு நிகழ்ச்சியின் போது சந்தித்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தும் அதிக அளவிலான பொருட்களுக்கு வரி குறைந்துள்ளது என்றார்.

இதனால் பொருட்கள் வாங்குதல் & விற்றல் அதிகரிக்க துவங்கும். இதனால் பொருளாதாரம் அதிக வளர்ச்சியை காண வாய்ப்புள்ளது. இதை உலக அளவில் உள்ள பெரும் நிதி நிறுவனங்கள்/ஆய்வுகளை நடத்தக்கூடிய நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதாரம் என்பது இந்த ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் அதிக வளர்ச்சி காணும் என கணித்துள்ளனர் என பகிர்ந்து கொண்டுள்ளனர் என்றார்.

ஜி.எஸ்.டி வரி குறைப்பை அமல்படுத்துவதை மாநில அரசுகள் தான் செய்ய வேண்டும் என கூறிய அவர் இது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்க்கிறார் என குற்றம் சாட்டினார்.

ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை திரும்ப மக்களுக்கே மத்திய அரசு கொடுப்பதாகவும்,  மக்கள் தரும் வரி, பல்வேறு திட்டங்களாக அவர்களுக்கே வழங்கப்படுவதாக கூறினார்.

ஜி.எஸ்.டி மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்க அதிகரிக்க, ஜி.எஸ்.டி.க்குள் வராத மற்ற பொருட்கள் சிறிது சிறிதாக கொண்டு வர வாய்ப்புள்ளது என கூறிய அவர், மாநில அரசாங்கங்கள் ஒத்துழைப்பு தந்தால் மிக விரைவாக பெட்ரோலிய பொருட்களையும் ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர முடியும் என்றார்.

கோவை கணபதி பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகளுக்கான துவக்க விழாவின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது வானதி இவ்வாறு கூறினார். 

பெட்ரோலிய தயாரிப்புகள் ஜி.எஸ்.டி.க்குள் வந்தால் மக்களுக்கு என்ன லாபம் ?

தற்போது, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மேல் மத்திய அரசு கலால் வரியையும், மாநில அரசுகள் வாட் வரியையும் விதிக்கின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலையில் வரிகள் மட்டுமே 50%க்கும் மேல் உள்ளது என கூறப்படுகிறது. ஜி.எஸ்.டி.யின் கீழ் இவை கொண்டு வரப்பட்டால், இவற்றின் மேல் அதிகபட்ச ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டாலும்  கூட அது தற்போது உள்ள அளவுக்கு இருக்காது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த வாட் வரியை விதிப்பதால், பெட்ரோல்,டீசல் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. ஜி.எஸ்.டி.யின் கீழ் இவை கொண்டு வரப்பட்டால் நாடு முழுவதும் இவற்றின் விலை ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கும்.

பொறுத்திருந்து பார்ப்போம் எரிபொருள் விலை இந்தியாவில் குறையுமா என்று...