பணிச்சுமை அதிகரிக்கிறது, காலி பாட்டில்கள் வாங்க தனியாக ஆட்கள் நியமிக்க வேண்டும் என கோவை டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
- by David
- Oct 03,2025
30.11.2025க்குள் தமிழ் நாடு முழுவதும் உள்ள அரசு மதுபான கடைகளில் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் /டாஸ்மாக் கடைகள்) வாடிக்கையாளர்களிடம் இருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ள நிலையில், காலி பாட்டில்களை மீண்டும் வாங்குவது மற்றும் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற வேலைகளால் தங்களுக்கு பணிச்சுமை அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டி கோவை டாஸ்மாக் ஊழியர்கள் 50 பேர் இன்று கோவை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மது பிரியர்கள் மதுவை குடித்த பின்னர் பாட்டில்களை இஷ்டம் போல தூக்கி வீசி செல்வது சுற்றுசூழலுக்கு ஆபத்தாக அமைந்துவருகிறது. இதை தடுக்க சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 கட்டணம் பெற்று, அவர்கள் மீண்டும் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது ரூ.10ஐ திருப்பி வழங்கும் நடைமுறையை பின்பற்ற 2022ல் உத்தரவிட்டது.
சமீபத்திய தகவல் படி மாநிலத்தில் உள்ள 4829 டாஸ்மாக் கடைகளில் 1800 கடைகளில் இம்முறை பின்பற்றப்படுகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் இந்த நடைமுறையை மாநிலம் முழுவதிலும் கொண்டுவர சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக்-கின் கோவை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பாட்டிலுக்கு கூடுதலாக பணம் பெறும் போது அடையாளத்துக்காக ஸ்டிக்கர் ஓட்டும் பணி, காலி பாட்டில்களை மீண்டும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் வேலை ஆகியவை தங்கள் பணிச்சுமையை அதிகரிப்பதாக அவர்கள் கூறினர். ஒருவர் பருகிய பாட்டில்களை வாங்கி வைக்கும் போது ஊழியர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
இப்பணிக்கு தனியாக வேலையாட்களை அரசு நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டத்தின் போது அங்கு வந்த டாஸ்மாக் மண்டல மேலாளரின் நேர்முக உதவியாளர் தலைமையிலான குழுவினர், ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிற திங்கள் (6.10.25) அரசுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என கூறியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.