பில்லூர் அணை கோவை மாநகரின் குடிநீர் தேவைகளை பூர்த்திசெய்யும் முக்கியமான ஒரு அணை. மேட்டுப்பாளையம்  பகுதியில் 1966ல் கட்டிமுடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த இந்த அணை கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது.

இந்த அணை 100 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் கொள்ளளவில் 70% வண்டல் மண் ஏற்கனவே குவிந்துள்ளதாக சென்ற ஆண்டே கணக்கிடப்பட்ட நிலையில், இதனால் நகரின் நீர் ஆதாரம் சுருங்கக்கூடும் என்று மக்கள் எச்சரித்தும், ஆணை முழுவதும் தூர்வாரப்படுமா என எதிர்பார்த்தும் வந்தனர்.

இந்நிலையில் அண்மையில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பில்லூர் அணை தூர்வாருதல் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இந்த அணை முழுமையாக தூர்வாரப்படும் எனவும் அணை முழுவதும் தூர்வாருவது குறித்து உலக வங்கி வல்லுநர்களின் கருத்துரை பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கோவை ஆட்சியர் கிரந்தி குமார் தெரிவித்துள்ளார்.