மே 2ம் தேதி காலை 9.45 மணி அளவில் உளுந்தூர்பேட்டை சாலை அருகே மதுரை ஆதினம் காரில் சென்று கொண்டிருந்த போது, அவரை மற்றொரு காரில் வந்தவர்கள் மோதி தாக்க முயன்றதாக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

தன்னை அவ்வாறு தாக்க வந்தவர்கள் வேறு மத அடையாளம் கொண்டவர்களாக இருந்ததாக அவர் கூறியது பெரும் சர்ச்சையாகவும், குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு காவல் துறை நடத்திய ஆய்வின் ஒரு பகுதியாக, சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்த போது, ஆதீனம் சென்ற கார் தான் வேகமாக இயக்கப்பட்டுள்ளது என்பதும், அவர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை என போலீசார் கண்டறிந்தனர்.

இந்த நிலையில், தன்னை தாக்க வந்ததாக ஆதீனம் பேசியதும், அந்த காரில் வந்தவர்கள் தொப்பி, தாடி வைத்திருந்தனர் என்பதை கூறி, பிற மதத்தை சார்ந்தவர்கள் தான் தன்னை தாக்க முயன்றனர் எனவும் அவர் கூறியதற்கு அவர் மேல் தமிழக அரசு, காவல் துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என
கோவை அனைத்து இயக்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் தந்தை பெரியார் திராவிட கழக மாநில பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினர் மட்டும் இது பற்றி தெளிவான விளக்கத்தை ஆய்வு மூலம் வழங்காமல் போயிருந்தால், ஆதீனம் கூறிய தவறான தகவல் மத கலவரம் நடக்க வழி செய்திருக்கும் என்பதால், ஆதீனத்தின் மேல் போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் ஆதீனத்தின் மீது பி.என்.எஸ். 302 பிரிவின் கீழ் மதக் கலவரத்தை தூண்டுதல், பிரிவு 113 ஆ பகுதியின் கீழ் ஒற்றுமையை சீர்குலைத்தல், பிரிவு 192ன் கீழ் தவறான தகவல் பரப்புதல் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும், இவ்வாறு பொய் தகவலையும், 2 மதத்தினரிடம் பகைமையை தூண்டும் படி கருத்து கூறியது கூட்டு சதியா என காவல் துறை கண்டறிய வேண்டும் என அவருடன் மனு வழங்க வந்த முற்போக்கு அமைப்பினர் கூறினர்.