கோவையில் வருகிற அக்டோபர் 9, 10 தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு
- by admin
- Sep 25,2025
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் உலகத் தொழில் மாநாடு கோவையில் அடுத்தமாதம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக இன்று கோவை வந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா. மோ.அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கோவையில் வருகிற அக்டோபர் 9, 10 தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதில் மொத்தம் 19 நாடுகளில் இருந்து 264 பங்கேற்பாளர்கள், 30,000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், இந்தியாவின் 10 மாநில அரசுத் துறைகள், ஒன்றிய அரசின் பத்து துறைகள் மற்றும் முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்கின்றன என கூறினார்.
இதை தொடர்ந்து, ஸ்டார்ட் அப் வளர்ச்சி பற்றி பேசிய அவர், இதுவரை 212 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ரூ.79.40 கோடி அரசு முதலீடு செய்யப்பட்டு உள்ளது. அதில் 68 நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.554.49 கோடி முதலீடு பெற்று உள்ளன. இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று உள்ளனர். மேலும், 43 எஸ்சி, எஸ்டி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.