கோவை  பூ மார்க்கெட் வளாகத்தில் பூ வாங்க வந்த பெண் உடுத்தியிருந்த மாடர்ன் ஆடை "அரைகுறையாக" உள்ளது என சில வியாபாரிகள் கூறி, கொஞ்சம் நாகரீகமாக உடை உடுத்தி பூ வாங்க மார்க்கெட்டுக்கு வாருங்கள் என அறிவுரை வழங்கியது சர்ச்சையாகி உள்ளது.

21.9.25 அன்று பூ மார்க்கெட்டில் பூ வாங்க ஸ்லீவ்-லெஸ் உடை அணிந்து ஒரு பெண் தனது நண்பருடன் வந்துள்ளார். அப்போது அவரிடம்  வியாபாரி ஒருவர், இங்கு அரைகுறையாக உடை அணிந்து வரக்கூடாது என கூறியதாக இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ காட்சியில் தெரிகிறது.

இது அரைகுறையான ஆடையா? ஒருத்தர் அணியக்கூடிய உடை என்பது அவர்களின் உரிமை என பதிலுக்கு அந்த பெண் தனது பக்கம் உள்ள நியாயத்தை பேசினார். அவரிடம் முதலில் விவாதம் செய்த வியாபாரிக்கு ஆதரவாக மேலும் சிலர் அங்கு வந்து, கோவை பூ மார்க்கெட்டில் அரைகுறையாக உடை உடுத்தி வந்தவர்களால் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது என கூற, அதற்கு அந்த பெண், தான் அணிந்துள்ளது அப்படிப்பட்ட உடையா? என கேள்வி எழுப்பினார்.

அதை தொடர்ந்து அந்த பெண்ணும் அவரின் நண்பரும் மார்க்கெட்டுக்கு வருவோர் எப்படிப்பட்ட உடை அணிந்து வரவேண்டும் என யாராவது கூறியிருக்கின்றனரா? இல்லையென்றால் அதை ஒரு பட்டியலிட்டு வெளியே போர்டு வைத்துவிடலாமே என விவாதம் செய்தனர்.

அங்கு நடக்கும் சம்பவத்தை அந்த பெண் மற்றும் அவரின் நண்பர் வீடியோ எடுத்துக்கொண்டிருத போது  விவாதம் முற்ற, வியாபாரிகள் கும்பலாக சேர்ந்து அவரை கண்டிக்கும் வகையில் கத்தினர்.

இது தொடர்பாக அந்த பெண் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளார்.

 

பிழை திருத்தம் : சம்பவம் நடந்தது 21.9.25 அன்று. முன்னர் தவறாக இன்று நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்டது.