வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் பயோ கேஸ் பிளான்ட் அமைக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு வெள்ளலூர் பகுதி மக்களிடம் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

ஏற்கனவே வெள்ளலூர் குப்பை கிடங்கால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அவர்களுடைய உடல் ஆரோக்கிய நிலை, அவர்கள் வாழும் பகுதியில் சுகாதாரம், மற்றும் அந்த பகுதியில் சுற்றுச்சூழலின் நிலைமை பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கும் நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில் குறிச்சி-வெள்ளலூர் மாசுபடுப்பு கூட்டுக்குழுவின் செயலர் கே.எஸ்.மோகன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ள உயிரி எரிவாயு கலன் (Bio Gas CNG Plant) - பயோ கேஸ் பிளாண்ட் குறித்து சில முக்கிய கேள்விகளை மாநகராட்சியிடம் எழுப்பி இருந்தார். அதற்கான பதில்கள் கடந்த செவ்வாய் அன்று கிடைத்தது. அதில் இந்த பயோ கேஸ் பிளான்ட் அமைக்கும் திட்டத்திற்கு வெள்ளலூர் மற்றும் குறிச்சி பகுதிகள் வசிக்கும் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதா ? என கேட்கப்ப்பட்டிருந்தது. அதற்கு அவ்வாறு கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என்று மாநகராட்சி தரப்பில் பதில் வழங்கப்பட்டது. 
மேலும் இதை அமைக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தரப்பில் ஒப்புதல் தரும் CTE எனும் ஒப்புதலை வழங்கி உள்ளதா என்ற கேள்விக்கு, அதற்கு மாநகராட்சி தரப்பில் தற்போது இந்த திட்டம் டெண்டர் நிலையில் இருப்பதால் டெண்டர் இறுதி செய்யப்பட்டவுடன் அதற்கான பணிகள் துவங்குவதற்கு முன்பு அந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிளான்ட்டை அமைப்பதற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி இருக்கிறதா என்ற கேள்விக்கு அவ்வாறு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மேலும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் அமைய உள்ள தெரு நாய் கருத்தடை மையம் அமைப்பதற்கு முன்பு இந்த பகுதி மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டதா என கேட்டதற்கு, அவ்வாறு பொதுமக்களிடம் கருத்துக்கு ஏற்ப கூட்டம் நடத்தப்படவில்லை என்று கோவை மாநகராட்சி சார்பில் பதில் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் குறிச்சி வெள்ளனூர் மாசு தடுப்பு கூட்டு குழுவின் சார்பில் இன்று மாசுக்கட்டுப்பாடு வாரியம் வாரியத்திடம் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  அதில் வெள்ளலூர் குப்பை கிடங்கு குறித்த விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன்பு இருக்கிறது என்பதால் விசாரணை முடிவு பெற்று இறுதியான தீர்ப்பு வரும் வரை குப்பை கிடங்கில் பயோகேஸ் பிளான்ட் உட்பட புதிதாக எந்த திட்டமும் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

கோவை மாநகராட்சியை எச்சரித்த பசுமை தீர்ப்பாயம்!

வெள்ளலூர் குப்பை கிடங்கு குறித்த வழக்கு பசுமை தீர்ப்பாயம் முன்பு நடைபெற்றுவருகிறது. வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளால் அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளவேண்டிய ஆபத்துக்கள் பற்றியும், வெள்ளலூர் பகுதியின் மண்ணில், காற்றில் ஏற்படும் மாசு பற்றியும் அப்பகுதி மக்கள் சார்பில் மறுமலர்ச்சி மக்கள் இயக்க நிர்வாகி ஈஸ்வரன் மற்றும் குறிச்சி-வெள்ளலூர் மாசுபடுப்பு கூட்டுக்குழுவின் செயலர் கே.எஸ்.மோகன், சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளையில் மனுக்களை வழங்கி இந்த துயரிலிருந்து அப்பகுதி மக்களுக்கு விடுதலை வேண்டும் என வழக்கு நடத்தி வருகின்றனர்.மேலும் தி இந்து ஆங்கில நாளிதழில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து பற்றிய கட்டுரைக்கு பின் பசுமை தீர்பாயமே தானாக முன்வந்து இதை விசாரித்து வருகிறது. 

இந்நிலையில் இந்த வழக்கில் வெள்ளலூர் குப்பை கிடங்கு பற்றி கோவை மாநகராட்சியிடம் தேசிய பசுமை தீர்ப்பாயம் சில அறிக்கைகளை (திட்ட அறிக்கை மற்றும் விரிவான அறிக்கை)  கேட்டுள்ளது. அடுத்த விசாரணையின் போது அதை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியது. 


இந்த விசாரணை நேற்று தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி தீர்ப்பாயம் கேட்ட அந்த அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறியிருக்கிறது. எனவே இதனால் தீர்ப்பாயம் மாநகராட்சி மீது அதிருப்தி அடைந்துள்ளது. மேலும் அடுத்த விசாரணை பிப்ரவரி 5ல் நடைபெறும். அதற்கு முன்னதாக மாநகராட்சி இந்த அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றால் அபராதம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளது.